தற்போதைய செய்திகள்

நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் கலையரங்கம் கட்ட நடவடிக்கை அமைச்சர் நிலோபர்கபில் உறுதி

வேலூர்:-

நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் கலையரங்கம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிலோபர்கபீல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு, நிம்மியபட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும், தொழிலாளர்நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபீல் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

மாணவ சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு அதிகமான நிதி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.மாணவ, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வாணியம்பாடி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நம்பிக்கை, கவனம் ,விடாமுயற்சி இவை மூன்றும் மாணவ மாணவிகள் வாழ்க்கையில் வெற்றிபெற அவசியமாக உள்ளது.
அம்மா அவர்களுக்கு குடும்பம் இல்லை மாணவ-மாணவியர் தான் அம்மாவின் பிள்ளைகள். பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் 16 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் மீது அக்கறை கொண்ட அரசாக கழக அரசு விளங்குகிறது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சி என்றாலே பெண்களுக்கு பொற்கால ஆட்சி ஆகும்.

அம்மா அவர்கள் உலகம் போற்றும் உன்னத திட்டமான தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண் சிசுக்கொலையை தடுத்தார். அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆலங்காயம், வாணியம்பாடி பகுதியில் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால் அவர்கள் பயன்பெறும் வகையில்ஈ.எஸ்.ஐ மருத்துவமனை, தொழிலாளர் நல அலுவலகம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. வள்ளிப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறைகள், நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கலையரங்கம் விரைவில் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் பேசினார்.