சிறப்பு செய்திகள்

நிலையான- வலிமையான ஆட்சி அமைய இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிப்பீர் – வாக்காளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்…

திருப்பூர்:-

நிலையான, வலிமையான ஆட்சி அமைய இரட்டைஇலை சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் அறிமுக கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுமலை தளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வேட்பாளரை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய தமிழகத்தில் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் வேட்பாளரே யார் என்றே தெரியாமல் திமுகவினர் கூட்டணி அமைத்து தவித்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு நிறைவேற்றியுள்ளது. 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டத்திற்கு கழக அரசு தந்துள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டம், கூட்டு குடிநீர் திட்டம், மேம்பாலங்கள், சாலைகள், அடிப்படை வசதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் கழகம் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அமைத்துள்ள வலிமையான கூட்டணி மூலம் 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி பெறும். கழக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக கழகம் விளங்குகிறது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் கழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சி.மகேந்திரன் இத்தொகுதிக்கு செய்துள்ள பணிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. வேட்பாளர் மகேந்திரன் எம்.பி.யாக இருந்தபோது நாடாளுமன்ற நிதி முழுவதையும் பொள்ளாச்சி தொகுதிக்கு பயன்படுத்தி எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். தமிழக தென்னை விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றவர். உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறவழிச்சாலை, சாலைகளை அகலப்படுத்துதல், மையத்தடுப்பான், பாலங்கள் விரிவாக்கம், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், நடைபாதை, ரவுண்டானா, உயர் மட்ட பாலம் என எண்ணற்ற பணிகளை செயல்படுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி முதல் கோவை வரை முழுக்க முழுக்க சிமெண்ட் கான்கிரீட் கொண்ட நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

மேலும் கழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயனடைந்திருப்பார்கள். ஆகவே நிலையான, வலிமையான ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிரமாக பணியாற்றுங்கள்.இத்தொகுதியில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் என்றுமே எடுபடாது. பொள்ளாச்சி தொகுதி கழகத்தின் கோட்டை. இத்தொகுதியில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.