தற்போதைய செய்திகள்

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உரை…

சென்னை:-

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும் என்று சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும் தேசிய உயிரியல் பன்முக ஆணையத்தின் சார்பில் சென்னையில் நேற்று சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆற்றிய உரை வருமாறு:-

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான தொலைநோக்கு சிந்தனையுடன் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் நீடித்த வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு முதல் தண்ணீர், துப்புரவு, சுகாதாரம் மற்றும் நீடித்தவளர்ச்சி, நகர்ப்புற புத்துயிரூட்டல், பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் இடர்குறைப்பு வரையிலான பல்வேறு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை நாடுவதற்கும் இந்நாள் பயன்படுகிறது.

இயற்கை மக்களுக்கு அளித்த கொடை முழுமையாக மாற்றத்தக்கதல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவற்றில் சிலவற்றை நம்மால் எந்த வகையிலும் மாற்றியமைக்க முடியாது. மக்களின் உடல் மற்றும் மன நலனுக்கு தேவையான பல்வேறு அடிப்படை பொருட்களான உணவு, எரிசக்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய வளங்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் இயற்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

புவியில் நீடித்த வாழ்க்கைக்கு தேவையான உயிரியல் பன்முகத் தன்மையின் முக்கிய பங்கு குறித்தும், உள்ளார்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்தும் நமக்கு நினைவூட்டவும் இந்நாள் பயன்படுகிறது. எனவே, நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியம். இந்தியா 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட உலகின் மிகவும் தொன்மையான நாகரீகம் கொண்ட நாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஒருங்கே கொண்டிருப்பதையும், கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையையும் காண முடிகிறது. காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்த நம்நாடு, கடந்த 70 ஆண்டுகளில் உலகின் முன்னணி பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய கவலை ஏற்படுவது நம்நாட்டிற்கு புதிதல்ல. 2200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, உயிர் பலிகள், விளையாட்டிற்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக அரச பிரகடனத்தின் மூலம், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காக பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முறைப்படி உருவாக்கப்பட்டன.

அசோக பேரரசின் ஸ்தூபிதான் தற்போது இந்தியாவின் தேசிய சின்னமாக திகழ்கிறது. அதில் இடம் பெற்றுள்ள நான்கு சிங்க முகங்கள், அதிகாரம், துணிச்சல், கௌரவம் மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. அத்துடன் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ள முழுமையாக மலர்ந்த தாமரை, வாழ்வியல் மற்றும் ஊக்க சிந்தனையின் ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கிறது.

வரலாற்று ரீதியாகவே இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது இந்தியமக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒன்று என்பதோடு, பல்வேறு மத நடைமுறைகள்,கிராமப்புற கலை, கலாச்சாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையாகவும் உள்ளது. இயற்கையோடு இணைந்து எளிமையான முறையில் நல்லிணக்கத்துடன் கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றுவதில் நீண்ட நெடுங்காலமாக இந்தியா முன்னிலையில் உள்ளது. இயற்கையை பாதுகாப்பது என்பது நமது மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒன்றாகும்.

நம் நாட்டில் பரவி விரிந்துள்ள அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கை பற்றி போதிக்கின்றன. இந்திய பாரம்பரியம், பூமித்தாயை சிறப்பிப்பதில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் வன பாதுகாப்பு சட்டம் 1980 மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்துராஜ் திருத்த சட்டம் 1992-ன் வாயிலாக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்திருப்பதுடன், அதிகாரப் பகிர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுதலில் பஞ்சாயத்து அமைப்புகளின் கடமையை உணர்த்துவதாகவும் உள்ளது. உலகளவில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பாகவும், சர்வதேச அளவிலான உடன்படிக்கைகள் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகிறது. மனித இனம் உயிர் வாழ்வதற்கு உயிரியல் பன்முகத்தன்மை மிகவும் அவசியமானதாகும். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும், உயிரியல் பன்முகத்தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளன.

வன உரிமைச் சட்டம் 2006 கொண்டு வரப்பட்ட பிறகு, வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. தற்போது உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவது போன்றவைதான் வளர்ச்சியின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. நீடித்த வளர்ச்சி என்பது இயற்கை வளங்களை சிக்கனமான முறையில் திறம்பட பயன்படுத்துவதை உணர்த்துகிறது. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

காடுகள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவதுதான் தற்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது. நமது சுற்றுச்சூழலியல் முறையில் வனப்பகுதி முக்கிய பங்கு வகிப்பதோடு, பூமியில் உயிர் வாழ்வதற்கும் இன்றியமையாத சேவையாற்றி வருகிறது. காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மாசு காரணமாக, மரங்கள் பெருமளவுக்கு அழிந்து விட்டன. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதன் மூலமாகவும் மரங்கள் பெருமளவு சேதமடைந்து, பெரும்பாலானோரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் சராசரியாக 33.3 சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில், இந்தியாவில் 21 சதவீத அளவிற்கே வனப்பகுதிகள் உள்ளன.

2001 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக உலக இயற்கை வளஅமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மரங்களை பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட ‘Tree Ambulance’ மற்றும் ‘TreeSpade’ போன்ற புதுமையான முன்முயற்சிகளை நான் அண்மையில் தொடங்கி வைத்தேன்.

இதன் மூலம் மரங்களை பாதுகாப்பதற்கான முதலுதவிகள், மரம் நடுதல், மரங்களை இடமாற்றி நடுதல், விதைப்பந்துகள் மூலம் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளுக்கும், மரங்களை பாதுகாத்து, வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கவும் இந்த திட்டங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும், அரிய வகைதாவர இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அந்த வகையில், இந்த ஆண்டு சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினத்தின் மையக்கருத்தான, “நமது உயிரி பன்முகத்தன்மை, நமது சுகாதாரம்” என்ற தலைப்புமிகவும் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

அத்துடன் இந்த ஆண்டுகொண்டாட்டங்கள், நமது உணவு மற்றும் சுகாதாரத்திற்கு உயிரி பன்முகத்தன்மைமிகவும் அவசியம் என்பதை உணர்த்துவதோடு, நமது உணவு முறைகளை மாற்றியமைத்துமனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக உள்ளது.

உலகளவில், கடந்த 100 ஆண்டுகளில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளிலிருந்து இல்லாமல் போய் விட்டதுடன், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பையும் வெகுவாக பாதித்துள்ளது. நமது தற்போதைய உணவு விநியோக முறையின் 80 சதவீதம், அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்ததாகவே உள்ளன. உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட பன்முகத்தன்மை இழப்பு, நமது வாழ்க்கை நடைமுறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு விலங்கின உற்பத்தியும் பாதி அளவிற்கு குறைந்து விட்டதோடு, மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, வேளாண்-உயிரி பன்முகத்தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய உணவு பழக்கவழக்கம், உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாக உள்ளன என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள், இந்தியாவின் கிராமப்புறங்களில் பெருமளவுக்கு பயன்படுத்தப் படுவதோடு ஊட்டச்சத்து மிகுந்தவையாகும். சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் என்பது, ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான 17 அம்சங்களில் ஒன்று என்பதோடு, உலகளவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

எனவே, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும். “இதுவரை எங்களை பாதுகாத்து வரும் பூமித்தாயே, தற்போது உன்னை பாதுகாக்க வேண்டிய தருணம் எங்களுக்கு வந்துவிட்டது” என்று அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.