சிறப்பு செய்திகள்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு – கழக தேர்தல் அறிக்கையில் உறுதி…

சென்னை:-

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தரப்படும் என்று கழக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கழக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கல்விக் கொள்கை 

அ) 1950-ம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி, மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. மத்திய அரசால் 1966-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கோத்தாரி குழு, பல்வேறு இனம், பண்பாடு மற்றும் மொழிகள் இருக்கும் இந்தியாவில், கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால்,

1976-ம் ஆண்டில் கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன் காரணமாக, இரட்டை அதிகார அமைப்பு உள்ள காரணத்தால் கல்வியின் நிலை சரிவடைந்துள்ளது. எனவே, பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை, மாநில அரசின் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஆ) தமிழ் நாட்டில் MBBS,M.S.,M.D.,B.Pharm.,M.Pharm , வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவத்தில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, பொறியியலில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்ற தொழில்முறைப் படிப்புகளுக்கு நீட் தேர்வினை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன் காரணமாக, கிராமப்புற மாணவர்களும், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களும் நீட் தேர்வின் கடுமையான பாடத் திட்டம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

மேற்கண்ட சமூகத்திலிருந்து சுமார் 85 சதவீத மாணவர்கள் கடுமையான நீட் தேர்வினை எழுதும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, தமிழக மாணவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பாடத் திட்டங்களில் தக்க தகுதியினை பெறும் காலம் வரை, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இ) “கல்வியில் உயர்ந்தால் தான் ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியிலும் உயர முடியும்’’ என்ற உண்மை நிலைக்கு ஏற்ப, பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை இந்திய நாடு உயர்வு பெறவேண்டும். தற்போதைய நிலையில் உயர்கல்வி என்பது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் முழு அளவில் கிடைக்க இயலாத நிலை உள்ளது. பொருளாதார குறைபாடு காரணமாக உயர்கல்வியைப் பெற முடியாமல் இருக்கும் இவர்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். உலக அளவில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்கல்வி வரை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவதை கருத்தில்கொண்டு, இந்திய நாட்டிலும் அவ்வாறு உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.