தற்போதைய செய்திகள்

நீர்நிலைகள்- சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவுறுத்தல்

சென்னை

நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற உணர்வு மக்களுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் மாநில ஈர நிலங்கள் ஆணையம் சார்பில் உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, ஈர நிலம் மற்றும் பல்லுயிர் பரவல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று, மாநில ஈரநில ஆணைய லச்சினையை (லோகோ) வெளியிட்டார். தொடர்ந்து ஆணையத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர், ஈர நில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

அரசு சார்பில் ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நில சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நம் மக்கள் ஏதாவது காலி இடமிருந்தால் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறார்கள். அதனால் நீர்வழிப்பாதை தடைபடுவதை அவர்கள் உணர்வதில்லை. நீர் நிலைகளை யாராவது ஆக்கிரமித்திருந்தால், எவ்வளவு விலை கொடுத்தாவது அதை அகற்றுங்கள் என நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது என்ற உணர்வு மக்களுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இக்கருத்தரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.துரைராசு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாச்சலம், தலைமை வன உயிரின காப்பாளர் எஸ்.யுவராஜ், மாநில ஈரநில ஆணைய உறுப்பினர் செயலர் வி.கருணபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.