நீலகிரி

நீலகிரியே வேண்டாம் என ஆ.ராசாவை ஓட வைப்போம் – முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.ம.வேலுசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., பேச்சு…

நீலகிரி:-

நீலகிரி தொகுதியே வேண்டாம் என ஆ.ராசாவை ஓட வைப்போம் என்று முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.ம.வேலுச்சாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி ஆகியோர் பேசினர்.

நீலகிரி தொகுதியில் கழக வேட்பாளர் தியாகராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றியை பெறப்போகிறது. ஸ்டாலின் ஒரு தவறான பிரசாரம் செய்து வருகிறார். இந்த கூட்டணி மக்கள் சக்தி பெற்ற கூட்டணி. அம்மாவின் மறைவுக்கு பின்னால் இந்த ஆட்சியை ஒழித்து விடலாம் என ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். ஆனால் அம்மா அவர்களின் திட்டங்களை மக்களுக்கு வழங்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

நீலகிரி தொகுதியில் எம்.பி.யாகி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்த கும்பல் இப்போதும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் நாம் 58 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக அவிநாசியில் பெற்றோம். இன்று மெகா கூட்டணியில் அதை விட அதிக ஓட்டுகளை பெறுவோம். 60 ஆண்டு கால பிரச்சினையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அவிநாசி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள் நாம் அதிகமாக பெற வேண்டும். தி.மு.க. ராஜா வெளியூரை சேர்ந்தவர். ஆனால் கழக வேட்பாளர் தியாகராஜன் நம் ஊரை சேர்ந்தவர். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வோம்.

இவ்வாறு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி பேசியதாவது:-

அவிநாசி தொகுதி கழகத்தின் எக்கு கோட்டையாக இருந்து வருகிறது. அவிநாசி, அத்திக்கடவு திட்டம் பற்றி எல்லாரும் பேசினார்கள். இந்திய வரலாற்றில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியது கழக அரசு தான். வருங்கால சந்ததியை காக்கும் அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய நமது கழகத்துக்கு உரிமையுடன் வாக்கு கேட்கலாம். ஆ.ராசா நீலகிரி தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து கெட்ட பெயரை உருவாக்கி உள்ளார். மீண்டும் அவர்கள் வந்தால் ஊழல் தான் செய்வார். அம்மா அவர்கள் கழகம் இன்னும் நூறாண்டுகள் ஆட்சியில் இருக்கும் ‘ என்று கூறினார். அதை நிறைவேற்ற நாம் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி பேசினார்.

தேர்தல் பொறுப்பாளர், நீலகிரி எம்.பி., ஏ.கே.செல்வராஜ் பேசுகையில், அவிநாசி தொகுதி அ.தி.மு.க கோட்டை. இந்த முறை இந்த தொகுதியில் அவிநாசியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். பெரம்பலூரை சேர்ந்த ராசா இங்கு வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியா ஒரு வல்லரசு நாடாக தொடர கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் மு.சுப்பிரமணியம், சேவூர் வேலுசாமி, ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி, பூண்டி லதா, பூண்டி பழனிசாமி, எம்.எஸ்.மூர்த்தி, ஜெயபால், பா.ஜ.க., நிர்வாகிகள் பாயிண்ட் மணி, சின்னசாமி, சண்முகம், கதிர்வேல், நந்தகுமார், சீனிவாசன், ஏ.கே.சண்முகம், பழனிசாமி, ரவி, தே.மு.தி.க., நிர்வாகிகள் முத்துவெங்கடேஸ்வரன், பிரசாந்த், பழனிசாமி, விஜயகுமார், ரங்கசாமி, திருமூர்த்தி, விஜயலட்சுமி, ஜோதிமணி, சுசீலா, மயிலாத்தாள் த.மா.கா பொறுப்பாளர்கள் சண்முகம், கொ.மு.க நிர்வாகி, கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி எஸ்.எம்.மூர்த்தி, பா.ம.க., பொறுப்பாளர்கள் பிரதீப் குமார், கோவிந்தராஜ், புதிய தமிழகம் பத்திரன், த.ம.மு.க., பாண்டியன், புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள், நீலகிரி பொறுப்பாளர் வி.கே.செல்வம், ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.