சிறப்பு செய்திகள்

நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ.17.65 கோடியில் 11 சேமிப்பு கிடங்குகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 16 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சேமிப்பு கிடங்குகள், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் முத்துப்பேட்டை கிளைக் கட்டடம் மற்றும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரி கிளைக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வகையில் புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், கீழ்முருங்கை கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், மேலப்புலம் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்,

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், செய்யூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பாளையங்கோட்டை கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிடங்குகள்,

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் முத்துப்பேட்டை கிளைக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம் மற்றும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரி கிளைக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; என மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 2 மத்திய கூட்டுறவு வங்கி கிளைக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், எடையாளர், காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 2016-17ஆம் ஆண்டிற்கான விடுபட்ட தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 49 லட்சத்து 91 ஆயிரத்து 475 ரூபாய்க்கான காசோலை மற்றும் 2017-18ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 2 கோடியே 68 லட்சத்து 89 ஆயிரத்து 935 ரூபாய்க்கான காசோலை, என மொத்தம் 3 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 410 ரூபாய்க்கான காசோலைகளை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மு.சுதா தேவி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனில் மேஷ்ராம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கு.கோவிந்தராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.