தற்போதைய செய்திகள்

நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க அரசு நடவடிக்கை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்…

நாமக்கல்:-

நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாமக்கல்லில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், பதிவுபெற்ற 1081 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கைத்தறி ஆதரவு திட்டத்தை எடப்பாடி கே.பழனிசாமி அரசு ரூ.40 கோடி மதிப்பீட்டில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தி வருகிறது. 10 சதவீத அகவிலைப்படி உயர்வு, 10 சதவீத கூலி உயர்வு, 4 சதவீதமாக இருந்த வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தி அளித்தது போன்ற பல்வேறு திட்டங்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளன. அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கைத்தறி, விசைத்தறி, பெடல் தறி ஆகிய தறிகளில் ஜவுளி உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதே அம்மா அவர்கள் அரசின் நோக்கமாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், இலவச வேட்டி-சேலைகள் ஜவுளி உற்பத்திக்காக அளித்து, நெசவாளர்களிடமிருந்து ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவுளி உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு ஆண்டுக்கு 9 மாதங்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க செய்து வருகிறோம். மீதமுள்ள இரண்டு மாதங்களுக்கும் அவர்களுக்கு பணி வழங்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை விரைவில் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இத்துறையில், திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் மூலம் ரூ.40 ஆயிரத்து 200 கோடி அளவிற்கு விற்பனையை எட்டியுள்ளோம். அதிகமாக இருந்த ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டு வருவதால் இது போன்ற சாதனைகளை எட்ட முடிந்துள்ளது. கதருக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளோம். கைத்தறிக்கு 12-இல் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிலிருந்தும் முழு விலக்கு அளிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு பால் விலை உயர்வை அறிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு குறைவாகத்தான் உள்ளது. இதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கால்நடைகளை வளர்ப்பதும், அவற்றிற்கு தீவனம் கிடைப்பது, விலை உயர்வு போன்ற பல்வேறு சிரமங்களை கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சந்திப்பதாலும், பால் வழங்கும் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது அதை பாதுகாக்கவும்தான் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா, நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.