திருநெல்வேலி

நெல்லை தொகுதி மக்களுக்காக உயிர் உள்ளவரை பாடுபடுவேன் – கழக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் உறுதி…

திருநெல்வேலி:-

உயிர் உள்ளவரை கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் பாடுபடுவேன் என நெல்லை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் சூளுரைத்துள்ளார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் அறிமுக கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர் ஜெனி வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-

‘என்னை வேட்பாளராக அறிவித்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். 93-ல் கட்சியில் சேர்ந்து அம்மாவின் தயவால் 2001-ல் சேரன்மகாதேவி எம்.எல்.ஏ ஆனேன். 2006-ல் வாய்ப்பு இழந்தேன். 2010-ல் ராஜ்யசபா எம்.பி ஆக புரட்சித்தலைவி அம்மா என்னை நியமித்தார். கடந்த தேர்தலில் வாய்ப்பை இழந்தேன். மனம் தளராமல் உழைத்தேன். சோதனையான காலக்கட்டத்தில் இரட்டைஇலை சின்னத்தை பெற முதல்வர், துணை முதல்வருடன் சேர்ந்து பாடுபட்டேன். எனது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மக்களுக்காக உழைத்தால் எல்லா வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். மத்தியில் வலிமை மிக்க தலைவரான பிரதமர் மோடி தலைமையின் கீழ் நல்லாட்சி நடந்து வருகிறது. அவரது தலைமையிலான வலிமையான கூட்டணியோடு மீண்டும் தேர்தலில் களம் காண்கிறோம். தனித்து நின்ற போதே நெல்லை தொகுதியில் 1.30 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். இந்த முறை வலிமையான கூட்டணி என்பதால் வெற்றியில் குறைந்தது 2 லட்சம் ஓட்டுக்களையாவது வித்தியாசம் காட்ட வேண்டும். மெத்தனமாக இருக்காமல் அனைவரும் பாடுபட வேண்டும். இங்குள்ளவர்களை பார்க்கும் போது புத்துணர்ச்சியும், உற்சாகமும் கிடைத்துள்ளது. மத்தியில் திடமான, நாட்டிற்கு பாதுகாப்பான ஆட்சி அமைய வேண்டும் எனில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

நாட்டிற்கு சுற்றுச்சுவர் போல மோடி பாதுகாப்பாக ஆட்சி நடத்துகிறார். ராஜதந்திரமாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினார். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர், துணை முதல்வர் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளனர். நெல்லையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. என் உயிர் உள்ளவரை கட்சியை பாதுகாக்கவும், நெல்லை தொகுதி மக்களுக்காகவும் சேவை செய்வேன்.

இவ்வாறு வேட்பாளர் மனோஜ்பாண்டியன் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட மன்ற செயலாளர்கள் கண்ணன், பெரியபெருமாள், மாவட்ட புறநகர் அம்மா பேரவைச் செயலாளர் நாங்குனேரி நடராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிஹர சிவசங்கர் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், பகுதிச் செயலாளர்கள் மாதவன், மோகன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் மகப்பூப்ஜான், கப்ரியல் ராஜன், பாளை மஸ்தான் பல்லிக்கோட்டை செல்லத்துரை, திருத்து சின்னதுரை, கேபிள் சுப்பையா, சங்கரன்கோவில் ஆறுமுகம் நோவா, செங்கோட்டை குருசாமி, நெடுஞ்செழியன் டவுண் சந்திரசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.