திருச்சி

நொச்சியம்-ஸ்ரீரங்கம் இடையே கொள்ளிடத்தில் புதிய பாலம் – பெரம்பலூர் கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி வாக்குறுதி…

திருச்சி:-

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நொச்சியத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி வாக்குறுதி அளித்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் தொடங்கி கிளியநல்லூர் ஊராட்சி வரை 35 ஊராட்சிகளில் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-

இந்தியா வல்லரசாக மாற வேண்டும். அதற்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அண்டை நாடுகளின் அடாவடிகளை அடக்கியாள ஒரு திறமையான, துணிச்சலான பிரதமர் வேண்டும். அப்படி ஒரு திறமையான நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் நரேந்திரமோடியே மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டும். அதற்கு நீங்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்ற வகையில் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த நல்லாட்சி தொடர விரைவில் நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலுக்கும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கும் இத்தேர்தல் அச்சாணியாகவும், முன்மாதிரியாகவும் அமையும்.

ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து. இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்தார்களா? இல்லை. அதுபோல் தான், இப்போது மு.க.ஸ்டாலினும், தி.மு.கவினரும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அவை எல்லாம் இரண்டு ஏக்கர் நிலம் போலத் தான் இருக்கும். எல்லாம் மாயை. அதை நாம் முறியடிக்க வேண்டும். நான் வெற்றிபெற்றால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், நெ.1 டோல்கேட்டில் ஒரு மேம்பாலம் அமைக்க பாடுபடுவேன். டோல்கேட்-நாமக்கல் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற பாடுபடுவேன். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நொச்சியத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசினார்.