திருச்சி

பச்சைமலை அரசு மருத்துவமனைக்கு இரவு மருத்துவர்- செவிலியர் நியமனம் – கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி வாக்குறுதி…

திருச்சி

பச்சைமலை அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர், செவிலியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி வாக்குறுதி அளித்துள்ளார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி புறநகர் மாவட்டம், துறையூர் சட்மன்ற தொகுதி, பச்சைமலையிலுள்ள வண்ணாடு, தோனூர், தென்புறநாடு, டாப்செங்காட்டுபட்டி, மணலோடை, பாலூர், மேலூர், செம்புளிச்சாம்பட்டி, எருமைபட்டி, பாளையம், நாகூர், புதூர் பாளையம், தண்ணீர்பள்ளம், இராமநாதபுரம், கிணத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மலைப்பகுதி மக்கள் எப்போதும் கழகத்திற்கு விசுவாசமானவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இப்பகுதி கழகத்தின் கோட்டையாக விளங்கி வருகிறது. முதன்முதலில் மலைப்பகுதிக்கு ரோடு போட்டது, பஸ் வசதி கொடுத்தது கழகம் தான். மலைவாழ் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுத்ததும் கழக ஆட்சியில் தான்.

கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் சமுதாய கூடம் கேட்டிருந்தீர்கள். அதை கட்டிக் கொடுத்துள்ளோம். தற்போது ஒருவழிப்பாதை உள்ளது. மரவள்ளி கிழங்கு லோடு லாரிகள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே இருவழி சாலை வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இரண்டு பாலம் கேட்டுள்ளீர்கள். இவைகளை கட்டாயம் நான் கட்டிக்கொடுப்பேன், கூடுதலாக இரண்டு முறை பேருந்து விடவேண்டும் என்று கோரியுள்ளீர்கள். அதனையும் செய்து கொடுக்கிறேன். மேலும், இங்கு அதிகமாக பயிரிடப்படுவது மரவள்ளிக்கிழங்கு அவற்றை எடைபோடுவதற்காக எடைமேடை ஒன்று கேட்டுள்ளீர்கள். அவைற்றையும் விரைவில் செய்து கொடுப்பேன் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

இங்குள்ள மருத்துவமனை பகலில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் உங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போதும், கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்தின்போதும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இனி இரவு நேரத்திலும் மருத்துவமனை செயல்பட இரவு நேர மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணிஅமர்த்தி மருத்துவ சேவைகள் தொடர ஏற்பாடு செய்கிறேன்.

பொங்கலுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கினார். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் தேர்தல் முடிந்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். உங்களுக்கே தெரியும். இதற்கும் தி.மு.க தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

நூறுநாள் வேலையை இருநூறு நாட்களாக உயர்த்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். நீங்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் நான் நிறைவேற்ற காத்திருக்கிறேன். எனவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரடை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றியடைய செய்யுமாறு பாதம்தொட்டு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசினார்.