தற்போதைய செய்திகள்

படவீடு கூட்டு குடிநீர் திட்டம் ஓராண்டில் நிறைவு பெறும் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

படவீடு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவு பெறும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், படவீடு, தண்ணீர்பந்தல்பாளையம், ஆனங்கூர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமானது அரசாங்கமே மக்களை தேடி சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படக்கூடிய திட்டமாகும். அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் 19.08.2019 அன்று சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் பெற்ற மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அனைத்து மனுக்களின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவுள்ளது.

படவீடு பேரூராட்சியை பொறுத்தவரையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இப்பகுதியின் நீண்ட கால பிரச்சினையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அம்மா அவர்கள் தனி கூட்டு குடிநீர் திட்டத்தினை அறிவித்தார். முதலமைச்சர் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வருட காலத்திற்குள் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் வருவாய் துறையின் சார்பில் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 வீதம் மொத்தம் ரூ.40,000-க்கான காசோலைகளையும், 1 நபருக்கு தற்காலிக உதவித்தொகையாக மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையினையும், 80 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.2.16 லட்சத்திற்கான காசோலைகளையும், 10 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 6 நபர்களுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 102 நபர்களுக்கு ரூ.4.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

பின்னர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வால்ராசாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் வால்ராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணியினை அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தண்ணீர்பந்தல்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தையும் திறந்து வைத்தார்.