தற்போதைய செய்திகள்

பட்டாசு ஆலைகளை மூட விட மாட்டோம் – தொழிலாளிகளிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி….

விருதுநகர்:-

பட்டாசு ஆலைகள் மூடப்படும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பட்டாசு ஆலைகள் தொடர்ந்து செயல்படும் என்று தொழிலாளிகளிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள முத்துசாமிபுரம், கண்டியாபுரம். எலுமிச்சேரி, இந்திராகாலனி, கங்கர்செவல், லட்சுமியாபுரம், விஜயகரிசல்குளம், சுரார்பட்டி, கோட்டைபட்டி, வல்லம்பட்டி, கீழச்செல்லையாபுரம் உட்பட 20 கிராமங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவர் சூரார்பட்டி, கீழச்செல்லையாபுரம் கிராமத்தில் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது;-

பட்டாசு ஆலைகளை மூடிவிடுவார்களோ என்று யாரும் பயப்பட வேண்டாம். 100 சதவிதம் கண்டிப்பாக பட்டாசு ஆலைகள் மூடப்படாது. நீங்கள் தைரியமாக வேலைக்கு செல்லுங்கள். பட்டாசு ஆலைகள் மூடிவிடுவார்கள் என்று யாராவது வதந்தியை கிளப்பினால் நீங்கள் நம்ப வேண்டாம். டெல்லியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு போட்டதால் நமது பட்டாசு ஆலைகள் 3 மாதம் மூடப்பட்டது. பட்டாசு ஆலை அதிபர்களுடன் நானும் சேர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பட்டாசு பிரச்சனை குறித்து சந்தித்து பேசினோம்.

அதனை தொடர்ந்து பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசு சார்பில் தனி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டது. மேலும் பட்டாசு ஆலை அதிபர்களை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை நான் சந்தித்தேன். பத்து நாட்களாக நான் டெல்லியில் தங்கி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினோம். அதனை தொடர்ந்து தான் பட்டாசு ஆலைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இது பட்டாசு ஆலை அதிபர்கள் அனைவருக்கும் தெரியும்.

தற்போது சரவெடி தயாரிப்பிற்கு மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் அந்த தீர்ப்பும் நமக்கு சாதகமாக வரும். அதனால் பட்டாசு தொழிலாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிட கழக கூட்டணி வேட்பாளர்களை வாக்காளர்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்.

சாத்தூர் தொகுதியில் கழக அரசு காலத்தில் தான் பல்வேறு சரித்திர திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாத்தூர் தொகுதியில் சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளருக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மற்றும் புதியதமிழகம், தே.மு.தி.க, பா.ஜ.க. பா.ம.க, ஜான்பாண்டியன் கட்சி, நடிகர் கார்த்திக் கட்சி, சேதுராமன் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.