சிறப்பு செய்திகள்

பட்டாசு தொழிலை பாதுகாப்போம் – தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் உறுதி…

விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என உறுதி அளித்தார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

விருதுநகர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு தேவை, வலிமை மிக்க உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு தகுதியானவர் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி ஆகும். நாடு பாதுகாப்பாக இருந்தால் தான், நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தனக்கென வாழாமல், நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் ஆற்றிய பணிகள் இன்னும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் பற்றி பேசி வாக்கு கேட்காமல் என்னையும், கூட்டணிக் கட்சிக் தலைவர்களையும் பற்றி மட்டுமே பேசி வாக்கு சேகரித்து வருகிறார். ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் எங்களை பற்றி குறை கூறி வாக்கு சேகரிக்கிறார். வேலூரில் தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட பணம் பற்றி ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார்.

தற்போது, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி என விமர்சித்தார். அதே போன்று ஸ்டாலின் ஒரு கவுன்சிலர் ஆகக் கூட தகுதியில்லாதவர் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் எனக் கூறுகிறார். இதுதான் ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த நிலைப்பாடா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

“கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள்” தி.மு.கவினர். விஞ்ஞான ரீதியாக ஊழல் புரியும் கட்சி தி.மு.க. பொய் பேசியே மக்களை ஏமாற்றுபவர்கள் திமுகவினர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்கவும், கழக அரசை கலைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அ.இ.அ.தி.மு.க இயக்கம் வலிமையான, உறுதியான கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட ஒரு பேரியக்கம். இதை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. ஏழை, எளிய மக்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து. இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்றாலே, எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். அந்த பட்டாசு தொழிலை இந்த அரசு பாதுகாக்கும். அதாவது, பட்டாசு உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலே நடைபெற்று வருகிறது.

அரசின் சார்பில் தனியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து உச்ச நீதிமன்றத்திலே வாதாடி, பட்டாசு தொழில் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்துடைய கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் தான் அந்த மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதனடிப்படையிலே தான் இந்தக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. “விலாசம் தந்தவர்களுக்கு துரோகம் செய்ததால் தான்” சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தங்களுடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் அந்த தொகுதியில் உள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்றிட வேண்டும். அவ்வாறு கட்சி நிர்வாகிகளின் பெரும் உழைப்பால் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றாமல் துரோகத்திற்கு இடமளித்ததன் காரணமாக சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சீவலப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 785 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தத் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்படும். விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது சாத்தூர் நகராட்சிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்படும். சாத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இருக்கன் குடி அணைக்கட்டுப் பகுதிகளில் ரூ.3 கோடி செலவில் இரண்டு நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சாத்தூர் சட்டமன்ற பகுதிக்குட்பட்ட சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் என அனைத்துப் பகுதிகளுக்கும் புதிதாக தர்ச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.8.17 கோடி மதிப்பீட்டில் 389 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு முரசு சின்னத்திலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.