தற்போதைய செய்திகள்

பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்…

சென்னை:-

பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடைபெறவிருக்கின்ற சட்டமன்றப் பேரவைக்கான இடைத்தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம்,

மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும்
ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. முந்தைய காலத்தில் தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை அடையாளத்திற்கான ஓர் ஆவணமாக அனுமதித்திருந்தது. தற்பொழுது கணிசமான வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.

எனினும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டு தொடர்ந்து அச்சிடப்படும். வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்துவற்காக “இந்தச் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஆணையத்தால் மாற்று ஆவணமாகக் குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று தடித்த எழுத்துக்களில் புகைப்பட வாக்காளர் சீட்டில் அச்சிடப்பட்டியிருக்கும்.

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருந்தால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையை செலுத்த தகுதியுடையவர் ஆவார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.