கடலூர்

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசு சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகளிர் மகப்பேறு பிரிவு, மருந்து கிடங்கு, புதிய கட்டிடம் கட்டும் பணி, ஆகியவற்றை பார்வையிட்ட அவர் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வு செய்த பின்னர் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நலப் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த உடன் உடனடியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்ட ஆணை பிறப்பித்தார். அந்த கட்டிடம் தற்போது திறக்கும் நிலையில் உள்ளது. தாய் சேய் நல வார்டில் முன்னாள் முதல்வர் அம்மாவால் உருவாக்கப்பட்ட அம்மா பரிசு பெட்டகம் வழங்கினேன். கடலூர் மாவட்டத்திலேயே தாலுகா அரசு மருத்துவமனையில் கண் புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்யும் வசதி பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மருந்து கிடங்கில் விஷக்கடி மருந்து மற்றும் மற்ற நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு கொடுக்க கூடிய மருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளது. மொத்தத்தில் பண்ருட்டி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது என்று பொது மக்கள் கூறுகிறார்கள். அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.