சிறப்பு செய்திகள்

பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கி வாழ்த்து…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய, தெற்காசிய, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிடும் அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை தடகள வீரர் அ.தருண், துடுப்பு படகோட்டும் வீரர் லஷ்மணன் ரோகித் மரடப்பா ஆகியோருக்கும், வாள் சண்டை வீராங்கனை சி.ஏ. பவானிதேவி-க்கான பணிநியமன ஆணையினை அவரது தாயாரிடமும் வழங்கினார்.

அம்மாவின் அரசு, விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகளில், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ, நமது மாநிலம் சார்பாக நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றாலோ, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றாலோ, அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டால் கூட, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2ரூ வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 15.8.2018 அன்று சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, நேரு உள் விளையாட்டரங்கத்தில் 16.10.2018 அன்று விளையாட்டுச் சங்கங்களின் சார்பில் முதலமைச்சருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், முதலமைச்சர் , பல்வேறு சங்கத்தினுடைய நிர்வாகிகள், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருடைய கோரிக்கையை ஏற்று விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அளவிலான கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வெல்பவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிடும் அரசாணை 20.2.2019 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தடகள வீரர் அ.தருணுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையும், 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதற்காக துடுப்பு படகோட்டும் வீரர் லஷ்மணன் ரோகித் மரடப்பாவுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையும், 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வாள் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சி.ஏ. பவானிதேவிக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையை அவரது தாயாரிடமும் வழங்கினார்.

மேலும், ஜகார்த்தாவில் நடைபெற்ற 3-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற 4 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் அவர்களது 4 பயிற்சியாளர்களுக்கு 18 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்,

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 35வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான 49 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் அவர்களது 4 பயிற்சியாளர்களுக்கு 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 8 பயிற்சியாளர்களுக்கு 1 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 10 வரை சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை ஓப்பன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தமிழ்நாடு மாநில டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய்அமிர்தராஜிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தொழில் துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவசண்முகராஜா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சந்திரசேகர் சாகமூரி, தமிழ்நாடு மாநில டென்னிஸ் சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹிட்டன் ஜோஷி, பொதுச் செயலாளர் பிரேம் குமார் கரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.