தற்போதைய செய்திகள்

பதவிவெறி பிடித்து அலையும் ஸ்டாலினிடம் நியாயம்- தர்மத்தை எதிர்பார்க்க முடியாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை,டிச.24-

பதவிவெறி பிடித்து அலையும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சோழவந்தான் தொகுதியில் உள்ள சமயநல்லூர், தேனூர், திருவேடகம், மேலக்கால், காடுபட்டி, தென்கரை, முள்ளிப்பள்ளம் உட்பட பல்வேறு பகுதிகளில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், ஒன்றிய கழகச் செயலாளர் கே.முருகேசன், செல்லப்பாண்டி பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

நடைபெறும் உள்ளாட்சித்தேர்தலில் முதலமைச்சர் தலைமையில் வெற்றிக்கூட்டணி போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்கள் உங்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று மக்களுக்கு 100 சதவீத உள்கட்டமைப்புகளை நிறைவேற்றித் தருவார்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். தமிழகம் வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் நாம் செல்வாக்கை இழந்து விடுவோம். முதலமைச்சருக்கு செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்று பொறுக்க முடியாமல் ஸ்டாலின் இதுவரை தமிழகத்தில் 32,000க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைந்தார்.

தற்போது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்லி அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவாக சொல்லி உள்ளனர். குடியுரிமை பற்றி சந்தேகம் வேண்டாம். வதந்தி பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அது என்னவென்றால் குர்ஆனில் ஒரு வாசகம் உள்ளது. அவதூறு செய்திகள் மூலம் ஒருவரை வீழ்த்த நினைத்தால் அது மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்தை செய்பவர்களுக்கு, அந்தப் பாவங்கள் பலன் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் மூலமாக அ.தி.மு.க.விற்கு பழிச்சொல் மூலமாக எங்களை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். அப்படி நினைத்தால் அவர் தான் வீழ்ந்து போவார் என்று குர்ஆனில் கூறியது படி நான் கூறுகிறேன்.

தற்போது எந்த மக்கள் திட்டமானாலும் சரி அதற்கு தடைபோட ஸ்டாலின் நீதிமன்றம் செல்கிறார். உள்ளாட்சி தேர்தல் ஆனாலும் சரி, பொங்கல் பரிசு ஆனாலும் சரி, குடியுரிமை பிரச்சினையாலும் சரி, ஆனால் கடைசியில் நீதிமன்றம் மூலம் குட்டுபட்டு திரும்புகிறார். ஏனென்றால் அவரிடம் நியாயம் இல்லை. தர்மம் இல்லை. பதவி வெறி தான் ஸ்டாலினிடம் உள்ளது.

இன்றைக்கு தமிழக முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். தற்போது உள்துறை அமைச்சகம் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளது. இதன் மூலம் தமிழினத்தின் பாதுகாவலனாகவும், காவலனாகவும் முதலமைச்சர் உள்ளார். பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்க முதல்வர்களிடம் பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று நமது முதலமைச்சரை பார்த்து ஸ்டாலின் ஏளனமாக கூறியுள்ளார்.

அவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கூறுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் நமது முதலமைச்சரின் நீர் மேலாண்மை திட்டத்தை பார்த்து கற்றுக்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாது முதலமைச்சரின் எளிமை, உழைப்பு, வேகம், செயல் திட்டங்கள் எல்லாம் மற்ற மாநில முதலமைச்சர்கள் பார்த்துக் கொண்டு கற்று வருகின்றனர்.

ஏனென்றால் நமது முதலமைச்சர் 50 ஆண்டு காலம் பொது வாழ்க்கையை அம்மாவிடம் கற்றுக் கொண்டுள்ளார். அம்மாவிடம் பாடம் பயின்றவர் தான் நமது முதலமைச்சர். ஆகவே ஸ்டாலின் தான் பாடம் கற்க வேண்டும். ஏனென்றால் அவர் பேசுவது கூட யாருக்கும் புரியவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியவில்லை.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.