தர்மபுரி

பதவி வெறி பிடித்து அலையும் தமிழகத்தின் கோயபல்ஸ் ஸ்டாலின் – கழக அமைப்பு செயலாளர் செம்மலை கடும் தாக்கு…

தருமபுரி

பதவி வெறி பிடித்து அலையும் தமிழகத்தின் கோயபல்ஸ் ஸ்டாலின் என்று கழக அமைப்பு செயலாளர் செம்மலை கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் அறிமுக கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை பேசியதாவது:-

மூன்று முக்கிய முடிவுகளை இந்த தேர்தலில் நாம் எடுக்கிறோம். நமது வேட்பாளர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். ஒரு நாட்டினுடைய பிரதமரை தேர்வு செய்வதற்காக இவர் வெற்றி பெற்றாக வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கோவிந்தசாமி சம்பத்குமார் ஆகியோர் வெற்றி பெறுவதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி பட்டொளி வீசி பறக்கும். கழகம்- பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே சென்னையில் கூறினார். நல்ல ஒரு நிர்வாகி என்று நிரூபித்த டாக்டர் அன்புமணி ராமதாசை மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அத்தனை ஏரிகளுக்கும் காவேரி நீரை பெற்றுத் தரும் திட்டத்தை அமைச்சர் கே.பி.அன்பழகனின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றி தந்திருக்கிறார். இது போன்ற திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்த கழகத்தின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொய்யையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் பொய்யை விதையாக விதைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை அவர் அறுவடை செய்ய முடியாது. நமது அம்மாவின் அரசு திட்டங்களை வகுத்துது செயல்படுத்துகிறது. நாம் உருவாக்குகிறோம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அபார்சன் செய்கிறார். நாம் திட்டங்களை கொண்டு வருகிறோம். அவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

நம் கூட்டணியில் இருக்கிற தலைவர்களை பாருங்கள். எதிர் அணியில் இருக்கிற தலைவர்களை பாருங்கள். அவர்கள் பதவி வெறி பிடித்து அலைகிறார்கள். எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். தமிழகத்தின் கோயபல்ஸ் என பொய் சொல்லிச் சொல்லியே ஆட்சிக்கு வரலாம் என்று பதவி வெறி பிடித்து வந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதை வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

2004-ல் இருந்து 2016 வரை மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ் நாட்டுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார்கள், என்ன சாதித்தார்கள் என்று அவர்களால் கூற முடியுமா? ஆனால் இன்று முதலமைச்சர் பிரதமரிடம் வைக்கின்ற அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுகிறது. பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளது. நமது தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பல நலத்திட்டங்களை கொண்டு வரவேண்டும். அவரது சேவை தொடர நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.