தற்போதைய செய்திகள்

பனையூர் கால்வாய் தூர் வாரும் பணி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ெதாடங்கி வைத்தார்

மதுரை

மதுரை மாவட்டம் வைகை ஆற்றிலிருந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் சேமிப்பதற்காக பனையூர் கால்வாய் தூர்வாரப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றிலிருந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் சேமிப்பதற்காக பனையூர் கால்வாய் தூர்வாரப்படும் பணியை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

வைகை ஆற்றிலிருந்து பனையூர் கால்வாய் ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் மேல்புறம், வலது புறத்திலிருந்து பிரிந்து 5,900 மீட்டர் தூரம் சென்று பனையூர் கண்மாயில் முடிவடைகிறது. பனையூர் கால்வாய் நெடுகை 2,800 மீட்டரில் இடதுபுறத்தில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் பிரிவு வாய்க்கால் மூலம் தண்ணீர் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வைகை ஆற்றின் படுகை மட்டம் கீழே சென்று விட்டபடியால் பனையூர் கால்வாய் கடந்த 40 ஆண்டு காலமாக தண்ணீர் வழங்கப்படவில்லை. தற்பொழுது, வைகை ஆற்றின் குறுக்கே 73.160 கிலோ மீட்டரில் ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் மேல்புறத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் தடுப்பனை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பனையின் மேல்புறம் வலது கரையில் தலைமதகு ஒன்று அமைத்து 2×1.50 மீட்டர் அளவுள்ள ஆர்.சி.சி. கட் அன் கவர் 75 மீட்டர் நீளத்திற்கு அமைத்தும், பனையூர் கால்வாய் தண்ணீர் வழங்கும் பணி மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பணி நிறைவடைந்தவுடன் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.