தமிழகம்

பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் உத்தரவு

சென்னை:-

பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேஷ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவநாயகி என்பவரின் கணவர் பெரியகருப்பன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மகன் ரகுநாத் என்பவர் மின் கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் பழனி மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் பானி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் குமார் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் என்பவரின் மகன் தமிழரசன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சின்னட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் என்பவரின் மகன் வெங்கடாசலபதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், தமிழ்த்தாய் கோவில் சாலையைச் சேர்ந்த அழகப்பன் என்பவரின் மனைவி காந்திமதி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவரின் மகன் மோகன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் மகன் பாண்டித்துரை எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் ராஜமாணிக்கம் கம்பிவேலியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் கவின்ராஜா விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.