தற்போதைய செய்திகள்

பள்ளி கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்

ஈரோடு

பள்ளி கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோடு புறநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சலங்கபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். சில பேர் கழகத்தை ஆட்டி விடலாம், அசைத்து விடலாம் என நினைக்கிறார்கள். கழகத்தை வெல்ல யாராலும் முடியாது.

மக்கள் செல்வாக்குள்ள இயக்கம் கழகம் மட்டுமே. புரட்சித்தலைவி அம்மா இந்திய துணைக்கண்டமே வியக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தினார். தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெண் குழந்தைகளின் உயிரைக் காத்தார். அன்னை தெரசா, அம்மாவை பாராட்டினார். காவேரி நதி நீர் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டியவர் அம்மா. காவேரி நதி நீர் பங்கீட்டீல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவர் அம்மா. அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்களை தூர் வார செய்து குடிநீர் பிரச்சினையை தீர்த்தார்.

மக்கள் நலனுக்கு எதிரான இயக்கம் தி.மு.க.. அம்மாவின் வழியில் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.திமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அம்மா வழியில் பொங்கல் பரிசாக ரூ. 1000 அறிவித்து செயல்படுத்தினார். திமுகவினர் வழக்கு தொடர்ந்து தடுக்க பார்த்தார்கள். ஆனால் நீதிமன்றம் அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இக்கூட்டத்தில் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், திருப்பூர் சாந்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கந்தசாமி, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், டாக்டர் மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.