தற்போதைய செய்திகள்

பழனி நகராட்சிக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் 20 மின் கலத்தால் இயங்கும் வாகனங்கள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்…

திண்டுக்கல்:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் 20 மின்கலத்தால் இயங்கும் வாகனம் மற்றும் 5 இலகுரக வாகனங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பழனி நகராட்சி அலுவலகத்திற்கு மின்கலத்தால் இயங்கும் வாகனம், இலகுரக வாகனங்கள் மற்றும் ஒப்பந்த பணிக்கான வேலை உத்தரவு ஆணை ஆகியவைகளை வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகள் அம்மாவின் அரசால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கென, பொதுமக்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி, பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளும் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளம் மற்றும் உலக புகழ்வாய்ந்த பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலும் அமைந்துள்ள பழனியில், பக்தர்களின் நலன்கருதியும், சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசால் பல்வேறு வளர்ச்சி பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பழனி நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விடுப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை, சுகாதாரமான முறையில் உரக்கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. மேலும், சேகரிப்பு பணியில் துப்புரவு பணியாளர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் – திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் மின்கலத்தால் இயங்கும் வாகனம் (BOW) 20 எண்ணமும், இலகுரக வாகனம் 5 எண்ணமும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வீடுகளிலிருந்து சேதரமாகும் திடக்கழிவுகளை இவ்வாகனம் மூலம் சேகரித்து நேரடியாக உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லும் வகையில் பழனி நகராட்சிக்கு இவ்வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விகிதாச்சார அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுவதற்க்கென 81 ஒப்பந்த பணியாளர்கள் ரூ.1.20 கோடி செலவினத்தில் நியமிக்க அரசு உத்திரவிட்டதின் அடிப்படையில், ஒப்பந்தப் பணிக்கான வேலை உத்திரவு ஆணை இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழ்மையிலும் ஏழ்மையான மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2000 வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். அதன்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கென தற்போது அரசால் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு, இப்பணிக்கென அந்தந்த பகுதிகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு வரும் அலுவலர்களிடம் உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். மேலும், தகுதியான பயனாளிகள் அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

முன்னதாக, பழனி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி அலுவலர்களுடன் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், பழனி நகராட்சி ஆணையாளர் நாராயணன், ஆவின் பால்வள தலைவர் ஏ.டி.செல்லச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.