திண்டுக்கல்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு…

திண்டுக்கல்:-

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசனம் முடிந்தவுடன் மறவாமல் பஞ்சாமிர்தமும், திருநீரும் வாங்கிச் செல்வர். இக்கோயிலில் கிடைக்கக்கூடிய பஞ்சாமிர்தம் பல நாட்களாக வைத்திருந்தாலும் கெட்டுப் போவது கிடையாது. சுவையும் குறையாது. தற்போது பழனி பஞ்சாமிர்ததிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக பழனி பஞ்சாமிர்தம் இணைகிறது.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கை பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.