சிறப்பு செய்திகள்

பாதாள சாக்கடைக்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் – சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்…

சென்னை:-

பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அனைவரும் போற்றும் வகையில் பொங்கல் பண்டிக்கைக்கு ரூ.1000 வழங்கிய முதலமைச்சரை நான் மனதார பாராட்டுகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் கே.எஸ்.சாலையில் செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தவுடன் முதலமைச்சர் உடனடியாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் பேரூராட்சி 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி. இங்கு நாள்தோறும் 1.5 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். ஆகவே சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில்,குன்றத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படும் பகுதிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்து, அதன் அடிப்படையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி 51 நகராட்சி, 59 பேரூராட்சி என 49 நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக கடந்த 31.8.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 கோடியில் 48 பகுதியில் கசடு கழிவு மேலாண்மைதிட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே முன்னுரிமைஅடிப்படையில் குன்றத்தூரில் 54,956 மக்கள் பயன்பெறும் வகையில் கசடுகழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர் புகழேந்தி பேசுகையில், மதுராந்தகம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறிவித்த அனைத்து திட்டங்களையும் அம்மா ஆட்சிதான் துரிதமாக செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் 55 பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்தது. இதில் 20 திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்ததும் 19 திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு 14 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று பதிலளித்தார்.