இந்தியா மற்றவை

பானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசாவில் 10 லட்சம் பேர் வெளியேற்றம்…

ஃபானி புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 8 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் படிப்படியாக பலம் பெற்று ஒடிசா கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் 3-ம் தேதி (நாளை) மதியம் ஒடிசா மாநிலம், கோபால்பூர் – சாந்த்பலி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பயங்கர கடல் சீற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

புயலை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாளை மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் புயல் சின்னர் புரி நகருக்கு அருகில் வரும் என்பதால் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புயல் காரணமாக மே 4 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தங்குவதற்கு சுமார் 900 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.

போனி புயலால் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் முன்னிச்சரிக்கை கருதி அந்த வழியாக செல்லும் 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்கத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலோரா ஆந்திராவிலும் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.