தற்போதைய செய்திகள்

பா.ஜ.க.வுடன் ஸ்டாலின் பேசியது உண்மை – தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்

சென்னை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருகிறார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பான தகவலை வெளியிட்டதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் அதை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். நிரூபிக்க முடியாவிட்டால் தமிழிசை சவுந்தரராஜன் விலகத் தயாரா என்று ஸ்டாலின் சவால் விட்டிருந்தார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர் சவால் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும், அவருக்கு நிலையான அரசியல் தெளிவில்லை என்றும் குறிப்பிட்ட தமிழிசை சவுந்தரராஜன் யாருடன் சேர்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் என்றும் கூறினார்.

ஸ்டாலின் ஏற்கனவே ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தார். சமீபத்தில் மூன்றாவது அணி பிரச்சினை குறித்து சந்திரசேகரராவுடன் ஆலோசனை நடத்தினார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழிசை அவ்வாறுகூறியதாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், பா.ஜ.க.வுடன் நான் பேசியதை தமிழிசை சவுந்தரராஜன் நிரூபிக்கத் தயாரா? அப்படி நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்.தமிழிசை அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று சவால் விட்டார். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

எனக்கு கிடைத்த தகவலை தான் நான் தெரிவித்தேன். ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் வேறொரு வழியில் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி எனக்கு தகவல் கிடைத்தது. அதைத்தான் நான் கூறினேன். பா.ஜ.க.வுடன் அவர் பேசியது உண்மை தான். அதை நான் நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்பேன். ஸ்டாலின் சவால் விட்டதற்காக நான் இப்போது அதைநிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்கத் தயாரா? பா.ஜ.க.வுடன் ஸ்டாலின் பேசியது உண்மை உண்மை உண்மை.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் அடித்துக் கூறினார்.