ராமநாதபுரம்

பா.ஜ.க வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் – அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரத்தில் கழக கூட்டணி கட்சியின் பா.ஜ.க வேட்பாளரை வரவேற்ற கழக நிர்வாகிக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. அவர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக கடந்த வாரம் ஏப்ரல் 1-ந்தேதி வாக்கு சேகரிக்க பெரியபட்டிணம் கிராமத்தில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது எஸ்.டி.பி.ஐ அமைப்பு மற்றும் எதிர் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் சில ரவுடி கும்பல்கள் மறைந்திருந்து பாட்டில்களை வீசி வேட்பாளரையும், அமைச்சர் மணிகண்டனையும் கொலை செய்ய திட்டமிட்டனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். ஆனால் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீசியதில் திருப்புல்லாணி ஒன்றிய கழக அவைத்தலைவர் உடையத்தேவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்பான எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குள் மீண்டும் கழக நிர்வாகிக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

நேற்றுமுன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு இஸ்லாமிய பெருமக்களும்,பெண்களும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். வேட்பாளர் சென்ற பிறகு ஆரத்தி எடுத்த இஸ்லாமிய பெண்ணை தாக்கியும், அவரது சகோதரரான திருப்பாலைக்குடி தேர்தல் பொறுப்பாளர் பாய்ஸ்(எ) முகமது காசின் என்பவரை அதே பகுதியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த முகமது யூசுப் என்பவர் தி.மு.க.வினரோடு சேர்ந்து அரிவாளால் அவரது இரு கைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

பலத்த வெட்டுபட்ட காசின் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை கழக நிர்வாகிகள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட கழக நிர்வாகியை தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எதிர்கட்சியினரின் இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.