தற்போதைய செய்திகள்

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் கலவரத்தை தூண்ட வி.சிறுத்தை சதி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை:-

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் கலவரத்தை தூண்ட சதி செய்யும் விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மக்களவை தொகுதியில் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்படி அவர்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது அவர்களை தடுத்து தாக்குவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, வன்கொடுமை தடுப்பு பிரிவில் பொய் புகார்களை கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளான கடலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் எங்களது தொண்டர்களை வாக்கு சேகரிக்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறு செய்தனர். தோல்வி பயத்தால் அவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபட்டாலும் பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எத்தகைய எதிர்வினையிலும் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தி உள்ளேன்.

தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் பணிகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன. அதேநேரத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தோல்வி பயம் காரணமாக கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.