திருப்பூர்

பின்னலாடை வாரியம் அமைக்க நடவடிக்கை – திருப்பூர் கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உறுதி…

திருப்பூர்

பின்னலாடைத்துறைக்கு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்போன் என்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உறுதி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று காலை திருப்பூர் 15 வேலம்பாளையம் அரசு பள்ளி மைதானம், டி.செட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபயிற்சி செய்வோரிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், ஜெ.ஆர்.ஆன். வி.ராதாகிருஷ்ணன், பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அப்போது 15 வேலம்பாளையம் பள்ளி மைதானத்தில் நடந்து சென்ற வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நடைபயிற்சி மேற்கொண்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து இரட்டைஇலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அந்த பகுதிக்கு வந்த போது கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், சால்வைகளை அணிவித்தும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். நடைபயிற்சி சென்றவர்கள் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆர்வத்துடன் வரவேற்று நிச்சயம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்போம் என உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் டி.செட் மைதானத்தில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செல்பவர்களிடமும் திருப்பூர் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குசேகரித்தார்.

அப்போது கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

பனியன் தொழிலால் பின்னலாடை தலைநகராக திகழ்கிறது திருப்பூர் மாநகரம். இங்கு கட்டமைப்புகளை மேம்படுத்த மத்தியில் இருந்து நிதியை பெற்றால் தான் இங்குள்ள கட்டமைப்புகளை மேம்படுத்த இயலும். தொழில் துறையினர் பின்னலாடை தொழில் வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றதும் நிச்சயமாக பின்னலாடை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் செய்வதற்கான சிரமங்களை நீக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏற்கனவே ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறோம்.

கோவை விமான நிலையத்தை முழுமையாக விரிவுபடுத்தி சர்வதேச அளவில் செயல்படுத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் கார்கோ அமைக்கவும் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுப்போம். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் தாய்க்கப்பல்கள் தொலைவில் நிற்பதால் கொழும்பு வரை சரக்குகளை அனுப்ப செல்ல வேண்டி இருக்கிறது. எனவே தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாய்க்கப்பல்கள் வந்து செல்லுமளவுக்கு, துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை இந்த அரசு தான் நிறைவேற்றி தந்து இருக்கிறது. திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி பக்கவாட்டு சுவர் எழுப்பி பாதுகாக்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் உங்களுடைய கோரிக்கைகளை முழுமையாக கேட்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

இந்த நிகழ்வில், டி செட் தலைவர் பொன்னுசாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் குமார், துணை தலைவர் ராமமூர்த்தி, லயன் ஜீவானந்தம், நிகான்ஸ் வேலுசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார், சண்முகசுந்தரம், கழக நிர்வாகிகள் கோட்டா பாலு, த.மா.கா., ரவிக்குமார், மோகன் கார்த்திக், செழியன், கொங்கு ராஜாமணி, கொங்கு சந்திரசேகர், தே.மு.தி.க., பா.ம.க., உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.