விளையாட்டு

பிபா கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு…

கோலாலம்பூர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் இருந்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல், பொதுச்செயலாளர் குஷால் தாஸ், மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் இடையே இன்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் கவுன்சில் (பிபா) உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. இதில் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல், கத்தார் நாட்டின் அல் மொகன்னதி, சவுதி அரேபியாவின் காலித் அவாத் அல்தெபிட்டி, ஜப்பான் நாட்டின் கோஜோ தஷிமா உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.

மொத்தம் உள்ள 46 வாக்குகளில் பிரபுல் படேல் 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் பிபா கவுன்சில் உறுப்பினர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக,  ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைவராக ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா, எதிர்ப்பின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷேக் சல்மான் 2013ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் தலைவராக பதவி வகிப்பார்.