தற்போதைய செய்திகள்

பிரசாந்த் கிஷோரிடம் தி.மு.க.வை ஸ்டாலின் அடகுவைத்து விட்டார் – வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

மதுரை

மாபெரும் சக்தியாக விளங்கும் முதலமைச்சரிடம் நெருங்கக்கூட முடியாததால் பிரசாந்த் கிஷோரிடம் தி.மு.க.வை ஸ்டாலின் அடகு வைத்து விட்டார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி கழகம் சார்பில் அம்மாவின் 72 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், ஓம்.கே.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், தலைமை கழகப் பேச்சாளர் நூர்ஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:- 

தற்போது அம்மா நம்மிடம் இல்லை என்றாலும் இந்த மூன்று ஆண்டுகள் அம்மா நம்மிடம் இருக்கிறார் என்ற நினைவில் தான் நாம் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம். அம்மாவின் மறைவிற்கு பின் இந்த ஆட்சி மூன்று நிமிடம் தாங்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அந்த விமர்சனங்கள் எல்லாம் அம்மா ஆத்மா வழி துணையுடன் தவிடுபொடியாக்கி இன்றைக்கு மூன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டு வெற்றி நடை போட்டு அம்மாவின் லட்சியம் முழக்கமான இன்னும் 100 ஆண்டுகள் இந்த இயக்கமே மக்கள் பணியாற்றும் என்ற வரலாற்றை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருக்கிறார்.

மன்னார்குடியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் புரட்சித்தலைவர், புரட்சிதலைவி காலத்திலிருந்தே பெயர் பெற்றவர். இவர் விவசாயிகள் பிரச்சினைக்காக கருணாநிதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர். அப்படிப்பட்டவர் முதலமைச்சர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல் அமைச்சரை நேரில் சந்தித்து ஒட்டுமொத்த விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படி அனைத்து மக்களிடமும் தனது அயராத உழைப்பின் மூலம் மாபெரும் சக்தியாக விளங்கும் முதலமைச்சரை ஸ்டாலின் நெருங்க கூட முடியவில்லை. இதனை சமாளிக்க பிரசாந்த் கிஷோரிடம் திமுகவை அடகு வைத்து விட்டார். இதுபோன்று எத்தனை பிரசாந்த் கிஷோர் வந்தாலும் அதிமுக தொண்டர்களிடம் தோற்றுத்தான் போவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.