இந்தியா மற்றவை

பிரதமர் தேர்தல் விதிகளை மீறவில்லை – தேர்தல் கமிஷன்…

புது டெல்லி:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் வர்தா பகுதியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த பிரசாரத்தில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட பயந்து, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதியில் போட்டியிடுகிறார்’ என கூறினார்.

இதனையடுத்து பிரதமர் மோடி பேசியது மத வெறுப்புணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். ஆனால் 3 வாரங்களாகியும் எவ்வித பதிலும் தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் மோடி மீதான தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் இந்த வழக்கை மே 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வத்ரா பகுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிககளை மீறியது அல்ல என கூறியுள்ளது.