தற்போதைய செய்திகள்

பிரதமர்- முதல்வர் 13-ந்தேதி ஒரே மேடையில் பிரச்சாரம் – 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்…

மதுரை:-

தேனியில் வருகிற 13-ந்தேதி நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர், முதல்வர் பேசுகிறார்கள். இதில் 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் ஊராட்சிகள் தோறும் பூத் கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள 78 ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உசிலம்பட்டி தொகுதி புரட்சித்தலைவர், மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் கோட்டையாகும். தற்போது அம்மாவின் அருளாசியோடு நாடாளுமன்ற தேர்தலை நாம் சந்திக்கிறோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் கடுமையாக களப்பணி ஆற்றி இரட்டை இலைக்கு அமோக வெற்றியை தேடித்தர வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வந்த போது ஒரு சிறப்பான எழுச்சிமிகு வரவேற்பை மக்கள் அளித்தார்கள். இதன் மூலம் நமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேனி நாடாளுமன்ற தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். கழக தொண்டர்களாகிய நம்மிடம் அவரை ஒப்படைத்துள்ளார். நாம் இந்தியாவிலேயே எந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கிடைக்காத வெற்றி ரவீந்திரநாத்குமாருக்கு கிடைத்தது என்ற வரலாற்றோடுதான் அவரை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்ற தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் நமக்கு வந்து விட்டது. புரட்சித்தலைவர் தோற்றுவித்த சின்னத்தை அழிக்க நினைக்கும் இந்த துரோகிகளின் தீய எண்ணங்களை வாக்காளர்களிடம் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும். அது மட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த வெளியூர்க்காரரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதுபற்றியும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

வருகின்ற 13-ந்தேதி ஆண்டிபட்டியில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பாரத பிரதமர் மோடிஜி மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த கழக கூட்டணி வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த பிரச்சார கூட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியினை பெற்று ப.ரவீந்திநாத்குமார் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் க.தவசி, செல்லம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராஜா, சேடப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட மீனவர்பிரிவு செயலாளர் போத்திராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.