தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் தான் மத்தியில் மீண்டும் ஆட்சி அமையும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை…

கோவை:-

துரோகம் செய்தவர்களால் நாட்டை காப்பாற்ற முடியாது. எனவே பிரதமர் மோடி தலைமையில் தான் மத்தியில் மீண்டும் ஆட்சி அமையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் வால்பாறையில் நகர கழகம் சார்பில் தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க கழக செயல்வீரர் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது. வால்பாறை நகர கூட்டுறவு வங்கித்தலைவரும், வால்பாறை அண்ணா திமு.க. தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி.அமீது, வால்பாறை நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவரும், நகர கழக செயலாளருமான மயில் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற கழக வேட்பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரும் செய்யாத எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை செய்து வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி மீது சிறப்பு அக்கறை செலுத்தி செயலாற்றி வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் சி.மகேந்திரனின் தீவிர முயற்சியால் ரூ.5000 கோடிக்கு மேல் மத்திய நிதியை பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு முதல்கட்டமாக 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வால்பாறையில் பணியாற்றி ஓய்வு பெறும் தோட்டத் தொழிலாளர்கள் இங்கேயே வசிக்கும் வகையில் இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற பணிகளை கழக அரசு செய்து வருகிறது.

ஆனால் திமுக மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் 17 ஆண்டுகள் மத்திய கூட்டணி ஆட்சியில் காபினட் பதவிகளை பெற்றிருந்தும் தமிழகத்திற்கு துரோகம் மட்டும்தான் செய்தது. நமது தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த ராஜபக்சேவிடமிருந்து கனிமொழி பரிசு பொருள் பெற்றதை மறக்க முடியுமா? இப்படி தமிழர்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்களா நாட்டை காப்பாற்ற போகிறார்கள்.

மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் கழகம் மட்டும்தான். இங்கு கூடியிருக்கும் எழுச்சியான கூட்டத்தை பார்க்கும் போது மாநாடு போல் காட்சியளிக்கிறது. ஆர்ப்பரிக்கும் இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது நமது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.எதிரி நாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் வலிமையான திறமையான பாரத பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும். மத்திய, மாநில திட்டங்கள் தொடர கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கூட்டத்தின்போது கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் அமமுக வை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் தாய் கழகத்தில் இணைந்தனர்.