தமிழகம்

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் – முதலமைச்சர் பேச்சு…

கன்னியாகுமரி

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கன்னியாகுமரி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜாண் தங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை வழங்கி பேசியதாவது:- 

நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அதிக எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது அ.இ.அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான வெற்றி அறிகுறியாகும். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இல்லாமல் இந்த தேர்தலை நாம் சந்திக்கிறோம். எனவே தேர்தல் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் நாம் உழைத்திட வேண்டும். அம்மா அவர்கள் நான் இல்லாமல் இருந்தாலும் 100 ஆண்டுகள் கழக அரசு நீடித்த ஆட்சியை தரும் என்றார். அவர்களின் கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். குமரி மாவட்ட கழக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் தான் தர முடியும். எனவே மீண்டும் அவரை பிரதமர் ஆக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லுறவு அமைய மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டிற்கு தேவையான பல நல்ல திட்டங்களை மக்களுக்கு நாம் தர முடியும். அதேபோன்று மீனவ சமுதாயத்திற்கு கழக அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மீனவ மக்கள் நமது வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜாதி, மத, மொழி, இன பாகுபாடு இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

நமக்கு மக்கள் என்ற ஒரே ஒரு ஜாதி தான் உண்டு. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப்பூங்காவாக உள்ளது. மக்கள் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே கழக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.