தற்போதைய செய்திகள்

`புகார் பெட்டி ‘ ஸ்டாலின் – பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு…

சேலம்

ஸ்டாலினுக்கு பெயர் புகார் பெட்டி என்று ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். தே.மு.தி.க மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

வேட்பாளர் சுதீசை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

இந்தக் கூட்டணி சேரக்கூடாது என தி.மு.க.வினர் திட்டவட்டமா நினைத்திருந்தார்கள். அதற்கு காரணம் இந்த கூட்டணி சேர்ந்தால் தி.மு.க இனி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாது என்ற காரணத்தினால் என்ன எல்லாம் சூழ்ச்சி செய்ய முடியுமோ அத்தனை சூழ்ச்சிகளை எல்லாம் செய்தார்கள். அது எல்லாம் சூழ்ச்சிகளையும் முறியடித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் சிறப்பான முறையில் நடைமுறைப்படி இந்த கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள்.

கேப்டன் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் காலதாமதமாகும். ஆனால் முடிவெடுத்து விட்டால் எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். 2011ல் அ.தி.மு.க -தே.மு.தி.க கூட்டணி அமைத்த போது ராசியான கூட்டணி என தமிழக மக்கள் நம்பினார்கள். மாபெரும் வெற்றிபெற்றது. இடையில் சில சூழ்ச்சிகளால் பிரிந்தது தற்போது நம் கூட்டணி. நாம கூட்டணி அமைத்த போது மிகப்பெரிய ராசியான கூட்டணி என ஒட்டுமொத்த தமிழக மக்களும் வரவேற்றனர்.

இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் தெய்வ பக்தி உள்ளவர்கள். தி.மு.க.வை எடுத்துக் கொள்ளுங்கள் கடவுள் இல்லை என்பார்கள். கிண்டல் செய்வார்கள். கொல்லைப்புற கோயிலுக்குள் சென்று வழிபடுவார்கள்.பக்திமான்கள் இருக்குமிடத்தில் பணிவு இருக்கும் பணிவு இருக்கும் இடத்தில் துணிவும் இருக்கும். அத்தனை தொகுதிகளையும் இந்த கூட்டணி கைப்பற்றும்.

இவ்வாறு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்

கூட்டத்தில் பா.ம.க மாவட்ட செயலாளர் நடராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர் காளிமுத்து, ஆத்தூர் நகர செயலாளர் மோகன், தே.மு.தி.க மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனஜா, தே.மு.தி.க மாவட்ட மகளிரணி செயலாளர் சுபா, ஆத்தூர் நகர தே.மு.தி.க செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி தலைவர் தென்னரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.