சிறப்பு செய்திகள்

புதிய இந்தியாவை உருவாக்க கழக கூட்டணிக்கு வாக்களிப்பீர் – தேனியில் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்…

வளம் மிக்க, வலிமை மிக்க பாதுகாப்புள்ள புதிய இந்தியாவை உருவாக்க கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெற செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பிரமாண்ட கழக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வெயில் சுட்டெரிக்க, வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் பிரதமரின் உரையை கேட்பதற்காக திரண்டிருந்தனர். அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவரை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் உரையாற்றினார்.

பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது:-

நாளை தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் ஒரு பொன்னாள். நாளை தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அதையொட்டி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் ஆகும். அவருக்கும் எனது சிரம் தாழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஹெலிகாப்டரில் இங்கு வந்தபோது கடுமையான வெப்பம் நிலவியது. அந்த வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு லட்சக்கணக்கில் நீங்கள் திரண்டிருக்கிறீர்கள். வெப்பம் அதிகம் என்றால் உங்களிடம் காணப்படும் உற்சாகம் அதைவிட அதிகமாக இருக்கிறது. பெரும் திரளாக திரண்டிருக்கும் உங்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். திரண்டிருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் போது நாளையும் நமதே, நாற்பதும் நமதே என்று என்னால் உறுதி செய்ய முடிகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், அம்மா அவர்களும் தமிழ்நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள். பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர்கள். அதன் மூலம் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருமை அவர்களுக்கு உண்டு. இங்கு சில கணக்கு வழக்குகளை உங்கள் முன் சொல்ல இருக்கிறேன். புதிய இந்தியாவில் ராணுவத்தினர் முதல் விவசாயிகள் வரை பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்த காவலாளியின் கடமையாகும்.

உங்கள் முன் நிற்கும் நான் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதை நீங்களும் நன்றாக உணர்வீர்கள். ஆனால் இந்த வளர்ச்சி திட்டங்களை பார்த்து தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர் எதிராக இருந்தவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். 2 ஜி வழக்கில் சிறை சென்றவர்களும், அவர்களை சிறைக்கு அனுப்பியவர்களும் இன்று இணைந்திருக்கிறார்கள். இந்த கூட்டணிக்கு காரணம் என்ன? நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவா? இல்லை நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவா? இல்லை. அந்த நோக்கம் அவர்களுக்கு இல்லை.

இந்த மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய ஒரே நோக்கம். தி.மு.க. ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்தது. ஆனால் ராகுல்காந்தி பிரதமர் என்று சொல்வதை பிரதமராக அறிவித்ததை அவரது கூட்டணி கட்சி தலைவர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஒவ்வொரு மாநில கட்சித் தலைவரும், தான் பிரதமராக வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ராகுல்காந்தியை பிரதமராக்குவேன் என்று சொல்லி தமிழக மக்களை ஒருவர் ஏமாற்ற பார்க்கிறார். தந்தை நிதி அமைச்சராக இருந்தபோது மகன் கொள்ளையடிக்கிறார்.

இப்போது மத்திய பிரதேசத்தில் அரசு கஜானாவில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு வந்து தேர்தல் செலவுக்கு செலவு செய்கிறார்கள். தி.மு.க. இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நான் காவலாளியாக இருந்து தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து அவர்களை பிடித்து மக்கள் முன் நிறுத்துவேன். காங்கிரஸ், தி.மு.க. சித்து விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் குடும்ப அரசியலுக்கும், ஊழல் அரசியலுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இங்கு திரண்டிருக்கிற லட்சோப லட்சம் மக்களின் கடமையாகும்.

காங்கிரசும், தி.மு.க.வும் மக்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ராணுவ வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்த பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த விமானப்படை அதிகாரி துணிச்சலாக செயல்பட்டார். அதையும் அவர்கள் அரசியலாக்கப் பார்க்கிறார்கள். 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு துணை நின்ற தி.மு.க. ஆட்சியிலும் அநியாயமும், அக்கிரமும் தான் தலைவிரித்தாடியது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. போபால் விஷவாயு தாக்குதலில் பலியானோர்களுக்கு இன்னும் உரிய நிவாரண நிதி கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல இதே காங்கிரஸ் ஆட்சி தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியையும் கலைத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நான் காவலாளியாக இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

மதுரை, போடி இடையே உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற காங்கிரஸ் ஆட்சி முயற்சி செய்யவில்லை. இப்போது அதை மாற்றி அமைத்து வருகிறோம். விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. கரூர், திருச்சி ரயில் பாதைமின் மயமாக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை இடையே மக்களின் வசதிக்காக அதி விரைவு ரயில் விடப்பட்டிருக்கிறது. தேனி மக்கள் மிகச் சிறந்த அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு விரைவில் மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கப்போகிறது. அதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள்.

விவசாயிகள் தேசத்தின் ஆத்மா போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தோம். முதல் தவணை வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் முடிந்தவுடன் இரண்டாவது தவணை வழங்கப்படும். வைகை நதி வரலாற்று சிறப்பு மிக்கது. அந்த நதியை கங்கை நதிபோல் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தேனி தொகுதி மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அதனால் தான் இங்கு மண்ணின் மைந்தர்களாக உள்ளவர்கள் கழக கூட்டணி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்காக எந்த நேரத்திலும் ஓடி வந்து குரல் கொடுப்பார்கள். பணியாற்றுவார்கள். ஆனால் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த ஆள் கிடைக்காமல் வேறு எங்கோ இருந்து ஒருவரை கூட்டி வந்து நிறுத்தியிருக்கிறார்கள். அவர் இறக்குமதி வேட்பாளர். இங்கு ேபாட்டியிடும் வேட்பாளர்கள் பாரம்பரியமாக இங்ேகயே வாழ்பவர்கள். இவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த மண்ணின் மைந்தர்கள்.

எனவே வரும் 18-ந்தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவின் மூலம் கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை அமோக வெற்றி பெறச் செய்து வளம்மிக்க, வலிமை மிக்க புதிய இந்தியாவை உருவாக்க முன்வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.