தற்போதைய செய்திகள்

புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் – இந்தி கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவிப்பு…

புதுடெல்லி:-

புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டமாயமாக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த பா.ஜ.க. ஆட்சியில் புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழு தனது பரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் அளித்தது. அதை சனிக்கிழமை அன்று மத்திய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமர்ப்பித்தார். அமைச்சகத்தின் இணையதளத்திலும் அந்த 484 பக்க வரைவு அறிக்கை பொதுமக்களின் கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்டது. இதன் மீது ஜூன் 30-ந்தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கல்வியாளர்களும் தங்கள் கருத்தை கூறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வரைவு திட்டத்தின்படி நாடு முழுவதும் மும்மொழி கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கட்டாயமாக எடுத்து படிக்க வேண்டும் என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதாவது இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி பயில வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழி தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இந்தி பேசும் மாநிலங்களில் 3-வது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயம் 3-வது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கும் போக்கு என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இந்த வரைவு திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழி கொள்கையில் இப்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தாய்மொழி, ஆங்கிலம் கட்டாய பாடமாக இருக்கும். அது தவிர அவரவர் விரும்பும் ஒரு மொழியை எடுத்து படிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்தியையும் படித்துக் கொள்ளலாம் என்று அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.