தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் ரூ.400 கோடி கையாடல் – அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.400 கோடி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று விடுபட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஒரு அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் புதுச்சேரி முதல்வர் எழுதி கொடுத்த பொய் செய்திகளை அப்படியே பேசி விட்டு சென்றுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிராந்தியமான ஏனாம் எந்த திசையில் இருக்கிறது என்பதுகூட தெரியாமல் பிரச்சாரத்தில் உளறிவிட்டு சென்றுள்ளார். இவரது முன்னுக்குப் பின் முரணான பொய் செய்திகளை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரே வன்மையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் அரசின் முறைகேடுகளுக்கு துணை நிற்பதாக ஸ்டாலினை துணை நிலை ஆளுநர் சாடியிருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் பொய் சொல்லியே இந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை கடத்தி விட்டார்.நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு தேவையான இலவச அரிசியை கொண்டு வந்து விட்டோம், ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்ததால் கோரிமேடு செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தேர்தல் முடிந்து 5 மாதம் ஆகிறது. ஆனால் கோரிமேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அரிசி இன்னும் புதுச்சேரி மக்களை சேரவில்லை.

அரிசி தான் தரவில்லை என்றால் அதற்குண்டான பணத்தையும் தரவில்லை. இந்த மாதிரி ஏறத்தாழ 19 மாதத்திற்கு மக்களுக்கான அரிசி அல்லது அதற்குண்டான பணம் ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.12 ஆயிரம் வீதம் வங்கியில் செலுத்தவில்லை. ரூ.400 கோடிக்குமேல் மக்களுக்கு அரிசிக்காக ஒதுக்கப்பட்ட பணம் முறைகேடாக சுரண்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஒரு அரசியல் வியாபாரி. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். புதுச்சேரியில் மட்டும் ஆண்டிற்கு ரூ.2500 கோடிக்கு மேல் திருட்டுத்தனமாக ஆன் லைனில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த குத்தகைதாரர் யாருன்னு மக்களுக்கு தெரியும். தற்போது நடைபெறுகின்ற இந்த தொகுதி இடைத்தேர்தலில் ஒருவேளை ஜான்குமார் வெற்றி பெற்றால் நிச்சயமாக லாட்டரி சூதாட்டம் பகிரங்கமாக கொண்டு வரப்படும். இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான அப்பாவி குடும்பங்கள் லாட்டரி சூதாட்டத்தால் அழிந்து போய் உள்ளது. எனவே இந்த தேர்தலில் மக்கள் நன்குணர்ந்து கழக கூட்டணி கட்சி வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும்.

கழக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் 2 மாதத்தில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தடையின்றி முதியோர் ஓய்வூதியம், கல்வீடு கட்டுவதற்கான நிதியுதவி, மீனவர் ஓய்வூதியம், இலவச அரிசி, சென்டாக் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தடையின்றி செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.