தற்போதைய செய்திகள்

புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்த தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

புதுடெல்லி:-

புதுச்சேரி அமைச்சரவை கூடி ஜூலை 7-ம்தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை.

இதுதொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் 7-ந்தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் நிதிநிலை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும், ஆளுநரின் முடிவு இல்லாமல் அதனை நடைமுறைபடுத்தக்கூடாது எனக் கூறி கிரண்பேடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு, புதுச்சேரி அமைச்சரவை கூடி ஜூலை 7-ந்தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வழக்கு விசாரணையை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை அமைச்சரவை முடிவை செயல்படுத்த தடை விதித்தனர். இந்த வழக்கில் முதல்வர் நாராயணசாமி பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.