தற்போதைய செய்திகள்

புதுச்சேரி ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து கழக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

புதுச்சேரி, பிப். 13-

புதுச்சேரி ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து கழக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி மாநில சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி ஆளுநரும், முதல்வரும் மலிவு விளம்பர மோதலில் ஈடுபட்டு புதுச்சேரியின் வளர்ச்சியை போட்டி போட்டு குட்டி சுவராக்கியுள்ளனர். இருவரின் மோதல் மற்றும் அதிகார போட்டிக்கு மக்கள் பகடைக்காயாக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடந்த மூன்று தினங்களாக அல்லோலப்பட்டு வருகின்றனர். மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் முதல்வர் வழக்கம்போல் ஆளுநரை வசை பாடுகின்றார். ஆளுநரும் அதிகார வெறி மற்றும் பழிவாங்கும் சிந்தனையுடன் தெருவில் இறங்கி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மிரட்டுவது மிக மோசமான செயல்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஹெல்மெட் அணிந்து செல்லுவதை கழகம் எதிர்க்கவில்லை. ஹெல்மெட் அணிந்து செல்லும் வகையில் புதுச்சேரி போக்குவரத்து சாலை வசதி இல்லை. ஒவ்வொரு 50 மீட்டருக்குள் ஒரு சாலை சந்திப்பு வருகிறது. நகரத்தில் 100 பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. எனவே நகரப் பகுதியை தவிர்த்து ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கலாம்.

கடந்த ஒருவாரத்திற்கு முன் முதல்வர் போக்குவரத்து வாரவிழாவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசி, 3 மாத காலத்திற்குள் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக கட்டாயமாக்கலாம் என்று கூறினார். உடன் ஆளுநர் முதல்வர் என்ன மூன்றுமாதம் அவகாசம் தருவது, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று டிஜிபியை அழைத்து உத்தரவிட்டார். உடன் அவரும் ஹெல்மெட் வாங்குவதற்குக்கூட நேரம் தராமல் மறுநாள் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

புதுச்சேரியில் மக்கள் ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லி தர்பார் ஆட்சி நடைபெறுகின்றதா? ஏற்கனவே போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் நகர பகுதியை தவிர்த்து பிற இடங்களில் அமல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம். அடக்கு முறையால் நமது எண்ணத்தை யாரும் மக்கள் மீது திணித்துவிட முடியாது.

அரசின் தவறான முடிவால் சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளில் 130க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் ஹெல்மெட் அமல்படுத்துவதில் மட்டும் ஆளுநர் தீவிரம் காட்டுவது ஏன்? நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஹெல்மெட் அணியாததற்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கான அபராதத்தை முதல்வரே செலுத்த வேண்டும். அதுபோல் ஏற்கனவே வசூல் செய்தவர்களிடம் அபராதத் தொகையை திருப்பித்தர வேண்டும். முதல்வரிடம் உள்ள துறைகளின் அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் கட்டாய ஹெல்மெட் என்ற பெயரில் மக்களுக்கு தொல்லை தரும் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஹெல்மெட்டை உடைத்து போராட்டத்தை நடத்தினர்.