தற்போதைய செய்திகள்

புதுச்சேரி காங்கிரசில் சீட் கொடுக்க பேரம் – கழக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி:-

புதுச்சேரி காங்கிரசில் சீட் கொடுக்க பேரம் நடப்பதாக கழக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று ரெயின்போ நகர் எட்டாவது குறுக்குத் தெருவில் வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் நாராயணசாமி தற்போது தான் உண்மையை பேசி வருகிறார். அதாவது இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் எந்த அடிப்படை பிரச்சினைகளையும் இத்தொகுதியில் தீர்க்கவில்லை என உண்மையை பேசி உள்ளார். திரும்பத் திரும்ப முதல்வர் இலவச அரிசி திட்டத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி வருகிறார்.

சென்னை உயர்நீதிமன்றமே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என தீர்ப்பு வழங்கிய நிலையில், இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநருக்கு கோப்பினை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இது அரசின் திட்டமிட்ட சதி செயல் ஆகும். அரிசிக்கு பதில் பணம் போட்டு வருகிறோம் என கூறும் முதல்வர் அரிசி போடாத 19 மாதத்திற்கு சேர வேண்டிய பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கவில்லை? ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் அளவில் ஏமாற்றி விட்டு எப்படி இந்த அரசால் அரிசிக்கு பதில் பணம் போடுகிறோம் என்று கூற முடிகிறது.

புதுச்சேரி மாநில மக்கள் சம்பந்தமாக கேள்வி கேட்க வைத்திலிங்கத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் அங்கு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இந்த தேர்தலில் ஏன் கழகம் போட்டியிடவில்லை என அதிமேதாவி போல கேள்வி கேட்கிறார். இங்கு ஏன் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது? இவருக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை? அவருக்கு ஏன் சீட் கொடுத்தீர்கள்? என இரண்டு மூன்று முடிச்சு போடும் வேலையை வைத்திலிங்கம் செய்கிறார்.

இந்த இடைத்தேர்தலில் இப்பகுதியை சேர்ந்த வில்லங்கம் வைத்தியநாதன், உமாசங்கர், முனுசாமி போன்றவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் இப்பகுதி மக்களுக்கு சம்பந்தமில்லாத ஜான்குமாருக்கு ஏன் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்? உங்கள் சமுதாயத்தில் உங்களை தவிர வேறு யாரும் அரசியலில் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பழுத்த காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் இருக்கும் ஜெயக்குமார் ரெட்டி போட்டியிட நீங்கள் ஏன் பரிந்துரை செய்யவில்லை? கோடி கோடியாக குறுக்கு வழியில் அரசை ஏமாற்றி பணம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தகுதியை விட காங்கிரஸில் போட்டியிட ஜான்குமாருக்கு என்ன உள்ளது என ஆராய்ந்து சீட்டு கொடுத்துள்ளீர்கள்? இதில் கைமாறாக மாற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பாரா?

அஇஅதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியை பற்றி பேச காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது. காங்கிரசில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்? ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் பெற வேண்டியதை பெற்று கொண்டு சீட்டு கொடுத்து விட்டு இப்போது ஆட்சி கவிழ்ந்து விடுமோ? என முதல்வர் தினந்தோறும் பயத்தோடு ஏன் இருக்கிறார்? உண்மையான காங்கிரஸ்காரர்களுக்கு சீட்டு கொடுத்திருந்தால் ஆட்சி மாற்றம் என்ற மாய பயம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்காது. ஒவ்வொரு தேர்தலுக்கும் பணம் உள்ளவர்களை தேடிப்பிடித்து சீட்டு கொடுக்கும் காங்கிரஸ் தான் அரசியல் வியாபாரியாக உள்ளது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.