தற்போதைய செய்திகள்

புதுடெல்லியில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு…

புதுடெல்லி:-

புதுடெல்லியில் ஆவின் பால் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆவின் பாலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலானது வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற பிரபல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பாலை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின்பால் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் ஆவின் பால் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையின்படி புதுடெல்லியில் நவீன ஆவின் பாலகத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் நகர்புற பால் நுகர்வோர்களுக்குமிடையே ஒரு பாலமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மூன்றடுக்கு கட்டமைப்பில் ஆவின் நிறுவனம் தனது பால் மற்றும் பால் பொருட்களை ‘ஆவின்’ என்கின்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில், கூட்டுறவு நிறுவனங்களில், பால் கொள்முதலில் ஆவின் நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது. 12,232 கிராமப்புற தொடக்கநிலை பால் கூட்டுறவு சங்கங்களில் 20.04 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

2015-ம் ஆண்டு தினசரி பால் கொள்முதல் 29.00 லட்சம் லிட்டராக இருந்தது. 2019-ம் ஆண்டு 33.50 லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல் தினசரி பால் விற்பனையும் 2015-ம் ஆண்டில் 18.00 லட்சம் லிட்டரிலிருந்து 2019-ம் ஆண்டு 22.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால்பொருட்களின் விற்பனை மதிப்பு மாதமொன்றிற்கு 2015-ல் ரூ.20.00 கோடியாக இருந்தது. 2019-ல் ரூ.35.00 கோடியாக உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் – பால், வெண்ணெய், நெய், பால்பவுடர், நறுமணப்பால், 6 மாதம் வரை கெடாத பால், இனிப்பு வகைகளான பால்கோவா, மைசூர்பாக்கு, குளோப்ஜாமூன், ரசகுல்லா மற்றும் ஐஸ்கிரீம் வகைகள், தயிர், மோர், பாதாம் பவுடர் ஆகிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

2018-19-ம் ஆண்டில் தமிழ்நாட்டையடுத்து பல்வேறு மாநிலங்களில் புதிய கிளை நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆவின் பால்பொருட்கள் ரூ.422 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது விற்பனையை துவக்கியுள்ளது. இதுவரை சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் ரூ.1.12 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. விரைவில், ஐக்கிய அரபு நாடுகள், தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு ‘ஆவின்’ நெய் விற்பனை செய்யப்பட உள்ளது. 17 வருடங்களுக்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.23 கோடி மதிப்பிலான 724 மெட்ரிக் டன் நெய் வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. ஆவின் நிறுவனத்தின் விற்பனை பெருக்கத் திட்டத்தின்கீழ் புதுடெல்லியில் புதிய நவீன ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் உறித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆசிஷ் வச்சானி, இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் காமராஜ், விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.