தற்போதைய செய்திகள்

புதுவையில் சட்ட விரோத பிரச்சாரம்-திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது புகார் கொடுக்க கழகம் முடிவு : அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி…

புதுச்சேரி

புதுச்சேரியில் சட்ட விரோதமாக பிரச்சாரம் செய்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது புகார் கொடுக்க கழகம் முடிவு செய்திருப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி மாநில கழக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு அத்துமீறல்களை புதுச்சேரி தேர்தல் துறை வேடிக்கை பார்த்தது வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடத்திற்கு தகுந்தாற்போல் ஜாதி, மத ரீதியில் பிரச்சாரம் செய்தனர். இதை தேர்தல் துறை வேடிக்கை பார்த்தது நியாயமற்ற செயல். பல இடங்களில் ஆளும் காங்கிரஸ் மத ரீதியில் வாக்காளர்களிடம் விஷ விதையை விதைத்தது.

பள்ளிவாசல் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களில் வாக்கு சேகரித்த போது இடத்திற்கு ஏற்றாற்போல் பிரச்சாரம் செய்தது. முஸ்லிம் மக்களிடம் வாக்கு சேகரித்தபோது குல்லா அணிந்து வாக்கு சேகரித்தனர். இதன் பேரில் நடவடிக்கை எடுக்காதது தவறு. இந்திய தேர்தல் ஆணையம் ஜாதி, மத வழி தடங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. அதை மீறி காங்கிரஸ் திமுகவினர் வாக்கு சேகரித்தனர். இது சட்டவிரோதமானது மட்டுமின்றி அநாகரிகத்தின் உச்ச கட்டம்.

காங்கிரஸ், திமுகவின் இச்செயலை அஇஅதிமுக வன்மையாக கண்டிக்கிறது. ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதால் புதுச்சேரி தேர்தல் துறை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளிக்க வேண்டும். தேர்தல் துறை புகார் அளிக்காவிட்டால் கழகம் ஆதாரத்துடன் புகார் அளிக்கும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். தேர்தல் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆளுங்கட்சிக்கு பயந்து ரங்கசாமி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை ஒருதலைபட்சமானது. இந்த சோதனை மூலம் ஆளும் கட்சியினரிடம் தேர்தல் அதிகாரிகள் சமரசம் ஏற்படுத்தி கொண்டனர்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.