தற்போதைய செய்திகள்

புதுவை காங்கிரஸ் அரசின் வேஷம் விரைவில் கலையும் – கழக எம்.எல்.ஏ அன்பழகன் ஆவேசம்…

புதுச்சேரி:-

புதுச்சேரியில் இலவச அரிசி கூட வழங்காத காங்கிரசின் வேஷம் தேர்தலில் கலைக்கப்படும் என்று கழக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறினார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து கழக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று உப்பளம் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தான் செய்த தவறுகளில் இருந்து மக்களை ஏமாற்ற பொய்யான தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி செய்தபோதுதான் மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இதை மறைந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த மாநிலத்திற்கும் விலக்கு இல்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தமிழகம், புதுச்சேரிக்கு நீட் தேர்வில் விலக்கு அளிப்போம் என்று அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகின்றது. ஏன் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என கேட்டால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரும். அப்போது செயல்படுத்துவோம் என கூறுகின்றனர். மூன்று ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தனி நிதி ஒதுக்கீடு செய்யாமல் துரோகம் செய்து வருகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய இலவச துணி, வீடு கட்டும் திட்ட நிதி, கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களைக்கூட செய்யாமல் ஏமாற்றும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

கழக கூட்டணி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி படித்த இளைஞர், இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. எனவே இளைஞரான நமது வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். தேர்தலை காரணம் காட்டி இலவச அரிசியை துணை நிலை ஆளுநர் நிறுத்திவிட்டதாக காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூறுகிறார். மூன்று ஆண்டுகால ஆட்சியில் இந்த மாதம் தேர்தல் மாதம். மீதியுள்ள 32 மாத ஆட்சியில் எத்தனை மாதம் நீங்கள் அரிசி போட்டீர்கள்? 20 மாதத்திற்கு மேல் ஏன் அரிசி போடவில்லை? சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டில் செயல்படுத்த முடியாதவர்கள், தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி வாக்கு கேட்பது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

சிவப்பு ரேஷன் கார்டுக்கு மட்டும் இலவச அரிசி வழங்குவோம் என்று அமைச்சரவையில் முடிவு எடுத்து ஆளுனரிடமும் ஒப்புதல் பெற்று விட்டனர். இப்போது அனைவருக்கும் அரிசி போடுவோம் என்று கூறுவது கடைந்தெடுத்த பொய்யாகும். இத்தேர்தலில் ஆட்சியாளர்களின் இந்த வேஷம் கலைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.