தற்போதைய செய்திகள்

புதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

புதுச்சேரி

புதுவை காமராஜ்நகரில் காங்கிரஸ் சார்பில் பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் டோக்கன் கொடுத்ததை கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி காவல்துறை மற்றும் தேர்தல் கண்டித்தும் புதுச்சேரி இசிஆர் சாலை சாமிப்பிள்ளைத் தோட்டத்தில்  அஇஅதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இப்போராராட்டத்தில் கழக சட்டமன்ற கட்சி கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., கழக துணை செயலாளர் கணேசன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், வேட்பாளர் புவனேஸ்வரன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நந்தா சரவணன், வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜான்குமார் வழங்கும் டோக்கன்களை தடுப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டம் குறித்து கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மாநில அரசு முழுக்க, முழுக்க தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளது. தேர்தல் நடக்கும்போதே மாநில அரசுக்கு ஆதரவாக தேர்தல்துறையும், காவல்துறையும் செயல்பட்டு உள்ளது. ஆளும் கட்சியினர் வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை பல முறை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் புதுச்சேரியின் ஒட்டுமொத்த கேபிள் இணைப்பின் உரிமையாளராக உள்ளார். இதன் மூலம் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 4500 வீடுகளுக்கு இலவச கேபிள் இணைப்பு கொடுத்துள்ளார். நாங்கள் புகார் கொடுத்த பின்னர் கண் துடைப்பிற்காக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் பணம் வினியோகம் செய்தனர். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நேற்று ஜான்குமார் கைசின்னத்திற்கு ஓட்டுப்போடச் சொல்லி 10 ஆயிரம் பரிசு கூப்பன்களை வழங்கியுள்ளார். இது குறித்து காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் மறுபடியும் ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தோம். தடுக்க ஒரு சிறப்பு குழுவை அமைத்தார். அந்த குழு 2 பேரை கைது செய்து, 500க்கும் மேற்பட்ட டோக்கன்களை பறிமுதல் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தான். அவர் வெற்றி பெற இலவச கேபிள் இணைப்பு, பணம், பரிசுக் கூப்பன் (ஏர் கூலர்) தடையின்றி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்துடன், ஜான்குமாரை போன்ற மிகப்பெரிய பணக்காரரை எதிர்த்து தேர்தலை சந்திப்பது என்பது இயலாத ஒன்றாக மாற்றப்படுகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. புதுச்சேரி தேர்தல் ஆணையம் முதல்வரின் கண் அசைவுக்காக கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்க கேடான செயல்.

புதுச்சேரி தேர்தல் ஆணையம் முழுமையாக செயல் இழந்து உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை வெற்றி பெற்றவராக அறிவிக்க இப்போதே தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. எனவே புதுச்சேரி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், ஓட்டுக்கு கேபிள் இணைப்பு, பணம், பரிசு கூப்பன் வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்ய புதுச்சேரி தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். மேலும் நாங்களும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.