தற்போதைய செய்திகள்

புதுவை சட்டசபையை கூட்ட முதலமைச்சர் பயப்படுவது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ கேள்வி

புதுச்சேரி

புதுவை சட்டசபையை கூட்ட முதலமைச்சர் பயப்படுவது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற கழக தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை பாதியில் ரத்து செய்யப்பட்டது புதுச்சேரியில் தான். அமைச்சரவை கூட்டம் ஏன் பாதியில் ரத்து செய்யப்பட்டது என்பதை முதல்வர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சரவை கூட்டம் உயர்ந்த, மதிப்புமிக்க கூட்டம். அதை முதல்வரும், அமைச்சர்களும் தங்களது சொந்த விருப்பு, வெறுப்புக்காக கூட்டுகின்றனர். அரசு நிர்வாகத்தை நடத்த தகுதியற்ற ஒரு அரசாக இது உள்ளது. முதல்வர் தன்னை தற்சோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த அரசு செயல்படாத அரசு, முரண்பாடான அரசு, ஊழல் மிகுந்த அரசு, ஆளுநருடன் மோதல் போக்கு கொண்ட அரசு, அரசியல் ரீதியாக மத்திய அரசுடன் மோதல் போக்கு கொண்ட அரசு, அரசு நிர்வாகத்தில் பிளவு உள்ள அரசு, ஆளுநராலும், முதல்வராலும் அதிகாரிகளை மிரட்டும் அரசு, அதிகாரிகளை இரண்டு பிளவாக கொண்ட அரசு அதனால் தான் சட்டசபையை கூட்ட முதல்வர் நாராயணசாமி பயப்படுகிறார்.

மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதை திசை திருப்புவதற்காக குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்கச் சொல்லி ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மக்கள் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்வது திமுக தான்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.