தமிழகம்

புத்தாண்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி : சுகாதாரத்துறை ஏற்பாடு

சென்னை

புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

புத்தாண்டையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, இ.சி.ஆர். சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகனங்களும் அதிகமாக சென்று கொண்டிருக்கும். அதேபோன்று இரவு 12 மணி அளவில் கோயில்களுக்கு செல்பவர்களும் அதிகமாக இருப்பார்கள். இச்சமயங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி செய்வதற்காக ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மெரினா கடற்கரையில் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களும், அண்ணா சாலையில் ஒன்று அல்லது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும், இ.சி.ஆர். ரோடு, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற இடங்களில் ஒன்றிரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

புத்தாண்டையொட்டி இளைஞர்கள் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு காவல்துறை தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி உற்சாகத்தில் இளைஞர்கள் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். அதுபோன்ற சம்பவங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிக்காக இந்த ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.