தற்போதைய செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார், தலைமை வகித்தார். கஜா புயல் மறுசீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளின் திட்ட இயக்குநர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்புக்கு இலக்காகிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் விதமாக விழுந்த மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை உருவாக்கும் நோக்கோடு அம்மாவின் அரசு மறுசீரமைப்புப் பணிகள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிதாக மரங்கன்றுகள் வழங்கப்படுகிறது.

சுனாமி எப்படி கடற்கரையோரம் வாழ்ந்த மக்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதோ, அதேபோல் நம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வாழ்வளித்த மரங்களை கஜா புயல் முற்றிலுமாக அழித்து விட்டது. கஜா புயலால் வரும் பாதிப்புகள் இந்த அளவிற்கு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அரசின் சார்பில் தேவையான எச்சரிக்கை அறிவிப்புகள் விடப்பட்டது. அன்றை தினம் புயல் வருவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் தட்பவெட்ப நிலை மிகவும் இயல்பாகவே இருந்தது.

இருப்பினும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரம் மற்றும் பகுதிகள் குறித்தும் கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், அனைவருக்கும் அப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கிறோம்.

அதேநேரத்தில் வீடுகள், மரங்கள், கால்நடைகள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் மக்கள் இழந்து தவித்தனர். அம்மாவின் அரசு எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கியது. தொடர்ந்து மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள், பட்டா வழங்குதல், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்க்கு பட்டா வழங்குதல், அரசு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் வழங்குதல், கோடை காலமாதாலால் சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது நாம் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக மரக்கன்றுகளை தேடும் நிலையில் உள்ளோம். எனது சொந்த முயற்சியில் புதுக்கோட்டையிலிருந்து 1000 தென்னங்கன்றுகள், 1000 மாங்கன்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில்பத்து கிராமத்தில் உள்ள 920 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1 தென்னங்கன்று, 1 மாங்கன்று வழங்கப்படும். இப்பகுதியில் 499 தென்னை விவசாயிகளின் 12,293 மரங்கள் புயலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.1,35,22,300 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரசுத்தரப்பில் 12,293 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 49 விவசாயிகளுக்கு 2579 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 450 விவசாயிகளுக்கு 9714 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் மரக்கன்றுகளைப் பெற்றுக்கொண்டு, வேளாண்மைத்துறை அலுவலர்களின் அறிவுரையோடு உரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை நல்லவிதமாக வளர்த்திட வேண்டும். மேலும் இந்த மரக்கன்றுகளை வளர்ந்து வரும் வரையில் அரசு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாகப்பட்டினம் சார்ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இணை இயக்குநர் (வேளாண்மை) எம்.நாராயணசாமி, உதவி இயக்குநர் (வேளாண்மை) கருப்பையா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.சண்முகராஜ், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.